திரையுலகிற்கு பல எதார்த்தமான படைப்புகளை, ஆழமான கருத்துடன் தந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த இயக்குனர் செல்வராகவன். இவரது படங்கள் வெறும் படங்களாக இல்லாமல், பாடமாகவும் இருந்து வருகிறது. தனது தரமான ஸ்கிரிப்ட்டுகள் மூலம் தமிழ் சினிமாவின் ஜீனியஸ் என்று அழைக்கப்படுகிறார். திரைக்கும் ரசிகர்களுக்கும் உள்ள தூரத்தை குறைப்பதில் இவருக்கு நிகர் இவரே. 

இவர் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்கள் ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருந்து வருகிறது. கடைசியாக சூர்யா வைத்து என்.ஜி.கே படத்தை இயக்கியிருந்தார். 

திரை ரசிகர்களுக்கு சிறந்த இயக்குனராய் திகழும் செல்வராகவன், தற்போது நடிகராகவும் களமிறங்கவுள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் சாணிக் காயிதம் படத்தில் முதல் முறையாக நடிக்கவுள்ளார் செல்வா. இந்த செய்தி சினிமா பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. செல்வராகவனுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் லீட் ரோலில் நடிக்கவிருக்கிறார். 

தற்போது வெளியான போஸ்டரில் இரண்டு பேர் இருப்பது போல் உள்ளது. அவர்கள் கையில் அருவா மற்றும் துப்பாக்கி உள்ளது. சிவம் சி. கபிலன் இந்த போஸ்டரை வடிவமைத்துள்ளார். யாமினி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். ராமு தங்கராஜ் கலை இயக்கம் செய்யும் இந்த படத்திற்கு நாகூரான் எடிட்டிங் செய்யவிருக்கிறார். 

இன்று காலை தான் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் குட் லக் சகி டீஸர் வெளியானது. இன்று மாலையே அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாவது, கீர்த்தி ரசிகர்களுக்கு இனிப்பூட்டும் வகையில் அமைந்துள்ளது. இயக்கம் தவிர்த்து தற்போது நடிப்பில் களமிறங்கும் செல்வராகவனுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது நம் கலாட்டா.