தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளமே வைத்திருக்கும் இயக்குனர் செல்வராகவன். வித்தியாசமான கதைக்களமும் தனக்கே உரித்தான காட்சி அமைப்புகளும் கொண்டு எதார்த்தமான சிறந்த திரைப்படங்களை கொடுத்துவரும் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை.

அடுத்ததாக மீண்டும் தனுஷுடன் இணைந்து நானே வருவேன் திரைப்படத்தை இயக்க உள்ளார். மேலும் தற்போது இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் புது அவதாரம் எடுத்திருக்கும் இயக்குனர் செல்வராகவன், முதல் முறையாக சாணிக் காயிதம் படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ஸ்கிரீன் சீன் தயாரிப்பில் உருவாகும் சாணி காயிதம் படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். செல்வராகவனுடன் இணைந்து நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்திற்கு யாமினி யக்னமூர்த்தி ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து டப்பிங் பணிகளில் இயக்குனர் செல்வராகவன் கலந்து கொண்டார். இந்நிலையில் தற்போது சாணிக் காகிதம் படத்தின் டப்பிங்கை நிறைவு செய்தார் இயக்குனர் செல்வராகவன் .இதனை அடுத்து இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துவரும் பீஸ்ட் திரைப்படத்திலும் இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.