நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. முயற்சிகள் ஒருபுறம் இருக்க, வைரஸின் தாக்கம் வேகமாக இருக்கிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

சில தினங்களுக்கு முன்பு நடிகர் கருணாஸ் மற்றும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாயினர் திரை ரசிகர்கள். 

சமீபத்தில் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியும் அவரது குடும்பத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து அவருடைய ட்விட்டர் பதிவில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் எனக்கும் என்னுடைய குடும்பத்தினருக்கும் லேசாக காய்ச்சல் வந்தது. அந்த காய்ச்சல் தானாகவே குணமடைந்தாலும், நாங்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டோம். அந்த சோதனை முடிவில் எங்களுக்கு லேசான அளவில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் ஆலோசனையின்படி, நாங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டோம் என்று ராஜமௌலி கூறியிருந்தார். 

இந்நிலையில், ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தின் தயாரிப்பாளர் டிவிவி தனய்யாவுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர் தெலுங்கில் பல மெகா பட்ஜெட் படங்களைத் தயாரித்தவர். கடந்த ஒரு வாரமாக அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் பரிசோதனை செய்தார். அப்போது கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ராஜமௌலி மற்றும் தயாரிப்பாளர் தனய்யாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஆர்.ஆர்.ஆர் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள இருக்கின்றனர்.

இரத்தம் ரணம் ரெளத்திரம் படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா, ஆலியா பட், பாலிவுட் ஸ்டார் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள ரேய் ஸ்டீவன்சன், ஐரிஸ் நடிகை அலிசான் டூடி ஆகியோர் நடிக்கின்றனர். பாகுபலிக்கு பிறகு ராஜமவுலி இயக்கும் படம் என்பதால் இதற்கு அதிக எதிர்பார்ப்பில் உள்ளது இப்படம். தயாரிப்பாளர் டிவிவி தனய்யா விரைவில் குணமடைய வேண்டும் என்று திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.