கடந்த 2016-ம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதி சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். முதல் படத்திலே அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தினார். இந்த படத்திற்காக தேசிய விருதையும் அவர் பெற்றார். இதனை தொடர்ந்து, விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை மற்றும் ராகவா லாரன்ஸுடன் சிவலிங்கா போன்ற படங்களில் நடித்தார். 

சமீபத்தில் இவரது நடிப்பில் ஓ மை கடவுளே திரைப்படம் வெளியானது. அசோக் செல்வன் மற்றும் வாணி போஜன் இந்த படத்தில் நடித்தனர். அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்கியிருந்தார். லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார். இந்த படம் ரித்திகாவின் திரைப்பயணத்தில் மிக முக்கிய படமாக அமைந்தது. நூடுல்ஸ் மண்ட என்று ஹீரோ கூப்பிடுவது, தோழியாக சண்டை போடுவது என காட்சிகளில் கச்சிதமாக நடித்திருந்தார் ரித்திகா. 

ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு ஏதும் இல்லாமல் வீட்டில் இருக்கும் திரைப்பிரபலங்களுள் ரித்திகாவும் ஒருவர். இதனால் ரித்திகா சோஷியல் மீடியாவில் படு ஆக்ட்டிவாக உள்ளனர். உடற்பயிற்சி வீடியோக்கள், போட்டோஷூட் பிக்சர்ஸ் என வெளியிட்டு அசத்தி வருகிறார். இந்த லாக்டவுனில் வீட்டில் பாடல் பாடிக்கொண்டே துணி துவைத்த ரித்திகாவின் வீடியோ பெரிதளவில் வைரலானது. 

இந்நிலையில் ரித்திகா அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் பற்றிய தகவல் தெரியவந்தது. லோட்டஸ் பிக்சர்ஸ் மற்றும் டேபிள் பிராஃபிட் இணைந்து இன்பினிட்டி பிலிம்ஸுடன் தயாரிக்கும்  படத்தில் நடிக்கவுள்ளார் ரித்திகா சிங். விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை பாலாஜி குமார் இயக்குகிறார். இன்று விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் வாழ்த்து கூறி போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரை பகிர்ந்த ரித்திகா, இந்த படத்தில் நடிப்பது குறித்து உறுதி செய்துள்ளார். 

ரித்திகா கைவசம் பாக்ஸர் படமும் உள்ளது. விவேக் இயக்கத்தில் அருண்விஜய் ஹீரோவாக நடிக்கிறார். இயக்குனர் விவேக் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது கூடுதல் சிறப்பு. அருண் விஜய்க்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார். பாக்ஸர் படத்தின் கேரக்டருக்காக மலேசியா மற்றும், வியட்நாமில் சிறப்பு பயிற்சிகளை எடுத்து வந்தார் அருண் விஜய். இமான் இசையில் இதன் பாடல்கள் உருவாகி வருகிறது. கடந்த ஆண்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் அருண் விஜய் மற்றும் ரித்திகாவின் கெட்டப் பலரையும் கவர்ந்தது. படத்தின் தயாரிப்பாளர் மதியழகன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற அறிவிப்பும் வெளியானது குறிப்பிடத்தக்கது.