கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் ஒரு கிடாயின் கருணை மனு. விதார்த், ரவீனா, ஜார்ஜ் மரியான் மற்றும் பல நடிகர்கள் நடித்திருந்தனர். ஈராஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக கால் பதித்தார் சுரேஷ் சங்கையா. இந்தப் படத்தின் வசனங்கள் மற்றும் திரைக்கதை பல்வேறு விருதுகளை குவித்தது. 

இதனைத்தொடர்ந்து கிராமத்துப் பின்னணியில், முழுக்க காமெடி பாணியில் சத்திய சோதனை படத்தை இயக்கி வருகிறார் சுரேஷ் சங்கையா. கிராமப்புறப் பகுதிகளில் இருக்கும் காவல் நிலையங்கள் மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்திய கதை என்று கூறப்படுகிறது. 

பிரேம்ஜி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் ஸ்வயம் சித்தா, பிக் பாஸ் ரேஷ்மா, ஞானசம்பந்தம், கே.ஜி.மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் மிக முக்கியக் கதாபாத்திரத்தில் லட்சுமி பாட்டி நடித்துள்ளார். பிரேம்ஜிக்கும் லட்சுமி பாட்டிக்கும் இடையே நடக்கும் காட்சிகள் மிக சுவாரஸ்யமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை நடிகர் மாதவன் வெளியிட்டார். சரண் ஆர்வி ஒளிப்பதிவாளராக பணியாற்றும் இந்த படத்திற்கு வெங்கட் எடிட் செய்கிறார். சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பரத் ராம் இந்த படத்தை தயாரிக்கிறார். ரகுராம் இசையமைக்கிறார். சத்திய சோதனை படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் போய் கொண்டிருப்பதாக சமீபத்தில் பிரேம்ஜி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இந்த படத்திற்கான டப்பிங் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. தான் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் பேசி முடித்துள்ளார் நடிகை ரேஷ்மா. இதுகுறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சத்திய சோதனை திரைப்படத்திற்கான டப்பிங் வேலைகள் ஆரம்பமாகிவிட்டன. முதல் முறை ராஜபாளயம் வட்டார மொழியில் பேசுகிறேன். எனக்கே சர்ப்ரைஸாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார். 

தமிழ் திரையுலகில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா பசுபலெட்டி. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் நடிகர் சூரியுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் ரேஷ்மா. புஷ்பா புருஷன் எனும் அந்த காமெடி இன்று வரை ரசிகர்களின் ஃபேவரைட்டாக உள்ளது. இதன் பிறகு கடந்த பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு உலகளவில் பிரபலமானார் ரேஷ்மா.