போதை பொருள் விவகாரம், கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் மேலும் சில சினிமா நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. பிரபலமான நடிகைகள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டிருப்பது நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. 

விசாரணை நடத்திய போலீசார் நடிகை ராகிணி திவேதியை கடந்த 4-ந் தேதி கைது செய்தனர். இதுதவிர நடிகை சஞ்சனா கல்ராணியின் நண்பர் ராகுல், ராகிணி திவேதியின் நண்பர் ரவிசங்கர், வீரேன் கண்ணா, ப்ரீத்வி ஷெட்டி, லோயம் பெப்பர் சம்பா, பிரசாந்த் ரங்கா, நயாஷ் உள்ளிட்டரை கைது செய்துள்ளனர். மேலும் நேற்று முன்தினம் போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக நடிகை சஞ்சனா கல்ராணியும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 14 பேர் மீது காட்டன் பேட்டை போலீஸ் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பெங்களூரில் உள்ள மகளிர் காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ள அவர்களை, கடந்த சில நாட்களுக்கு முன் போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக, பெங்களூர் கே.சி. அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு நடிகை சஞ்சனா மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்தார். போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விஷயம் தெரியவந்தது. 

இதுகுறித்து சஞ்சனா கூறும்போது, போலீஸ் மீதான நம்பிக்கை போய்விட்டது. நான் எதற்காக கைது செய்யப்பட்டேன் என்று தெரியவில்லை. காரணத்தையும் சொல்லவில்லை. எனக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டால், அது என்னுடையதாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. எனது வழக்கறிஞர்கள் ரத்த பரிசோதனைக்கு மறுப்பு தெரிக்கும்படி கூறியிருக்கிறார்கள் என்றார்.

பின்னர் நீதிமன்ற உத்தரவை காட்டிய பின் பரிசோதனை செய்து கொண்டார். இந்த பரிசோதனை முடிவுகள் வர ஏழு நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. இந்த வழக்கின் முக்கிய நடிகை ராகிணி திவேதி தனது சிறுநீர் மாதிரியில் தண்ணீரை கலந்து மருந்துவ பரிசோதனைக்கு கொடுத்துள்ள தகவல் தற்போது தெரியவந்துள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பதை சிறுநீர் பரிசோதனை மூலம் கண்டறிய முடியும் என்பதால் அவர் இவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் மீண்டும் ஒரு முறை சிறுநீர் மாதிரியை அவரிடம் வாங்கியுள்ளனர்.