உத்தரகாண்ட் மாநிலத்தில் “பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண் மீது பொய் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்று, பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் போலீசை மிரட்டும் ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிராக பல்வேறு குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன என்று தொடர்ந்து செய்திகள் வெளிவந்த நிலையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க விடாமல், அதற்கு மாறாக பாதிக்கப்பட்ட பெண் மீதே பொய்யான வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று, ஆளுங்கட்சியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. ஒருவரே இந்த பாதக செயலில் ஈடுபட்டது தான், நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

உத்தரகாண்ட மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ மகேஷ் நேகி தான், போலீசாரை மிரட்டிய குற்றச்சாட்டில் தற்போது சிக்கி இருக்கிறார்.

உத்தரகாண்ட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண், “என்னைக் கடந்த 2 ஆண்டுகளாக, பாஜக எம்.எல்.ஏ மகேஷ் நேகி, பலவந்தமாகக் கட்டாயப்படுத்தி பல்வேறு இடங்களுக்கு மிரட்டி என்னை அழைத்துச் சென்றதோடு, என்னை அவர்கள் அடித்து துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர்” என்று, பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். அத்துடன், இது தொடர்பாக அங்குள்ள ஹரித்வார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை போலீசார் முதலில் ஏற்றுக்கொள்ளாமல், அலைக்கழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், பாதிக்கப்பட்ட பெண் தொடர்ந்து போராடி வந்த நிலையில், போலீசார் வேறு வழியின்றி அந்த பெண்ணிடம் புகாரைப் பெற்றுக்கொண்டு வழக்குப் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வரும் ஹரித்வார் காவல் துறை அலுவலர் ஒருவருக்கு போன் செய்த குற்றம்சாட்டப்பட்ட பாஜக எம்.எல்.ஏ மகேஷ் நேகி, “என் மீது புகார் கொடுத்த பெண் மீது நீங்கள் பொய் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்று, கூறி மிரட்டியதாகத் தெரிகிறது.

அத்துடன், “சம்மந்தப்பட்ட அந்த பெண் மீது பொய்யான ஒரு அறிக்கை தயாரித்து நீதிமன்றத்தில் அளிக்குமாறும்”  பாஜக எம்.எல்.ஏ மகேஷ் நேகி, மிரட்டல் தோணியிலேயே போலீசாரிடம் கூறி உள்ளார்.

பாஜக எம்.எல்.ஏ மகேஷ் நேகி, போலீசாருக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்த அந்த ஆடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த மாநில சமூக ஆர்வலர்கள் இந்த ஆடியோவை இணையத்தில் வைரலாக்கினர்.

அந்த மாநிலத்தில் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்த நிலையில், இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த டேராடூன் காவல் துறை கண்காணிப்பாளர் அருண் மோகன் ஜோஷி, “இந்த விவகாரம் தொடர்பாகத் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக” குறிப்பிட்டார்.

மேலும், “பாதிக்கப்பட்ட பெண் அளித்த உண்மையான வாக்கு மூலமே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும், அச்சுறுத்தலுக்கு உள்ளான காவல் துறையினரால் பதியப்பட்ட போலியான அறிக்கை இணைக்கப்படாது” என்றும், விளக்கம் அளித்தார்.

“அதேபோல, வழக்கு தொடர்பாக வரும் அனைத்து ஆதாரங்களும் இந்த வழக்கில் முழுமையாக விசாரிக்கப்படும்” என்றும், அவர் தெரிவித்தார். இதனையடுத்து, பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பாஜக எம்.எல்.ஏ மகேஷ் நேகி பேசும் போது, “என் மீதான இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானது. இந்த குற்றச்சாட்டுக்கள் எனது அரசியல் வாழ்வைச் சீர்குலைக்கச் செய்யப்பட்ட சதித் திட்டம்” என்றும், கூறினார்.

இதனிடையே, பாஜகவின் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பொதுச் செயலாளர் சஞ்சய் குமார் என்பவர், அந்த மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பணி புரிந்து வந்த ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த புகாரும், கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானதும் குறிப்பிடத்தக்கது. இதனால், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜகவில் புயல் வீசத் தொடங்கி உள்ளது.