தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த நடிகை ராதிகா சரத்குமார், தற்போதும் தென்னிந்திய சினிமாவில் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். திரைப்படங்கள் மட்டுமல்லாது சின்னத்திரையிலும் கொடிகட்டிப் பறக்கிறார் ராதிகா சரத்குமார் .

சித்தி, அண்ணாமலை, செல்வி, வாணி ராணி, சந்திரகுமாரி, சித்தி 2 என பல மெகா தொடர்களில் நடித்து தமிழக இல்லங்களில் இருக்கும் அனைத்து மக்களின் சின்னத்திரை ஃபேவரட் ஆக இருக்கிறார். தனது ராடான் மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராக பல மெகா தொடர்களையும் திரைப்படங்களையும் தொடர்ந்து தயாரித்து வருகிறார். 

அந்தவகையில் தனது தயாரிப்பில் புதிய வெப்சீரிஸ் ஒன்றை தயாரிக்க உள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நடிகை ராதிகா சரத்குமாரின் தயாரிப்பு நிறுவனமான ராடான் மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாராக உள்ள புதிய வெப்சீரிஸ்-ல் நடிகர் சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

“இரை” என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வெப்சீரிஸ்-ஐ, உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த தூங்காவனம், நடிகர் விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் படங்களை இயக்கிய இயக்குனர் ராஜேஷ்.M.செல்வா இயக்குகிறார். இந்த வெப்சீரிஸுக்கு முன்னணி இசையமைப்பாளரான ஜிப்ரான் இசையமைக்கிறார்.  விரைவில் இதுகுறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நடிகை ராதிகா சரத்குமார் அடுத்ததாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம், இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய ஜெயில் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.