பொதிகை தொலைக்காட்சியின் நிலாப்பெண் தொடரின் மூலம் நடிகராக அறிமுகமானவர் வேணு அரவிந்த்.தமிழ் சின்னத்திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான  நடிகர் வேணு அரவிந்த் 90-களின் ஆரம்பத்தில் இருந்து தமிழ் சின்னத்திரை உலகில் பல மெகா தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.  

குறிப்பாக சன் டிவியில் வெளிவந்த சூப்பர் ஹிட் மெகா தொடரான அலைகள் தொடரில் தனது வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். மேலும் நடிகை ராதிகா சரத்குமார் கதாநாயகியாக நடித்து தயாரித்துள்ள பல சூப்பர்ஹிட் தொடர்களான வாணி ராணி, செல்வி, அரசி, சந்திரகுமாரி உள்ளிட்ட தொடர்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் வேணு அரவிந்த், கொரோனாவிற்குப்பின் நிமோனியாவால் மிகவும் பாதிக்கப்பட்டு, பின்னர் மூளையில் இருந்த கட்டியை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அறுவை சிகிச்சைக்குப் பின் தற்போது கோமாவில் இருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது நடிகர் வேணு அரவிந்தின் உடல்நிலை குறித்து பரவிவரும் பல குழப்பமான செய்திகளுக்கு பதில் அளிக்கும் விதமாக நடிகை ராதிகா சரத்குமார் ட்விட்டரில் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், 

நடிகர் வேணு அரவிந்த் கோமாவில் இருப்பதாக ஊடகங்களில் தவறான செய்திகள் பரவி வருவது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது... வேணு அரவிந்த் உடல்நிலை குறித்து அவரது மனைவி மூலமாக மிகவும் நெருக்கமாக கண்காணித்து வருகிறேன்... அவர் உடல்நிலை சரியில்லாமல் தான் இருந்தார்... ஆனால் இப்போது நன்றாக இருக்கிறார்!!! மிகவும் நல்ல மனிதர்... அவர் விரைவில் மீண்டு வர அனைவரும் பிரார்த்தனை செய்வோம்... தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்!!! 

என பதிவிட்டுள்ளார். நடிகர் வேணு அரவிந்த் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பல விதமான செய்திகளும் பரவிவரும் நிலையில் தற்போது ராதிகா சரத்குமார் இதுகுறித்து பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.