'பிரதீப் ஆண்டனிக்கு RED CARD!'- HOUSEMATESகளின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 லிருந்து வெளியேற்றப்பட்டார்! 

RED CARD - பிரதீப் ஆண்டனி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்,pradeep antony got red card and evicted in biggboss tamil season 7 | Galatta

விறுவிறுப்புக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாமல் நடைபெற்று வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் ஆண்டனி RED CARD வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டு இருக்கிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முதல் நாளில் இருந்தே அதிரடியாக விளையாடிய பிரதீப் ஆண்டனியின் மீது சக ஹவுஸ்மேட்ஸ்கள் அளித்த தொடர் புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகளின் காரணமாக பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். இதுவரை நடந்த சீசன்களில் வைத்து பார்க்கும் போது இந்த சீசனில் களமிறங்கிய பிரதீப் ஆண்டனியை போல் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தெளிவாக புரிந்து கொண்டு விளையாட வந்தவர்கள் யாரும் இல்லை என சொல்லும் அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் அனைத்து நுணுக்கங்களையும் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தவர் போல் மிகுந்த புரிதலோடு விளையாடிய பிரதீப் ஆண்டனி மீது ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு விதமான எதிர்மறை விமர்சனங்கள் வீட்டிலிருந்து வந்த போதும் ரசிகர்கள் மத்தியில் ஹீரோவாகவே ஜொலித்தார். 

எக்கச்சக்கமான இடங்களில் அடாவடித்தனம் பண்ணும் வகையில் பிரதீப் ஆண்டனி நடந்து கொண்டாலும் பல முக்கிய விஷயங்களை ஆண்டனி கையாண்ட விதத்திலும் பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு விளையாட்டு இந்த விளையாட்டை எப்படி விளையாட வேண்டும் என்ற விஷயத்திலும் பிரதீப் ஆண்டனி ஒட்டுமொத்த ஹவுஸ் மேட்ஸ்களுக்கும் தனிநபராய் அனைவரையும் எதிர்த்து அசைக்க முடியாத ஒரு போட்டியாளராக வலம் வந்தார். உதாரணத்திற்கு பிக் பாஸ் வீட்டில் ஏதாவது ஒரு பிசிகல் டாஸ்க் நடந்தால் அதில் சகப் போட்டியாளர்களோடு மோதல்கள் நடைபெறும் போது அந்த நொடியில் கோபத்தில் டாஸ்கிலிருந்து வெளியில் வந்து அவர்களுக்கு இடையில் தனிப்பட்ட முறையிலான ஒரு சண்டை நடப்பதை வழக்கமாக நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் ஒரு முக்கியமான டாஸ்கில் பிரதீப் ஆண்டனிக்கு அடிபட்ட போதும் அது விளையாட்டு தான் தொடர்ந்து விளையாட வேண்டும் என ஒரு ஸ்போர்ட்ஸ்மேன் ஷிப்போடு விளையாடியது அனைவரது பாராட்டுகளையும் பெற்றது.

இது ஒரு புறம் இருக்க இதுதான் என்னுடைய கேரக்டர், இப்படித்தான் நான் பேசுவேன் இப்படித்தான் நடத்துவேன் அனைவரையும் என்பது போல, காதல் கன்டென்ட் ரெடி செய்வது பற்றி பேசுவது, பெண்களைப் பற்றி மட்டமாக பேசுவது, மரியாதை இன்றி எல்லோரிடமும் பேசுவது சண்டை பிடிப்பது, ஒரு உச்சகட்டத்திற்கு அந்த சண்டை சென்ற பிறகும் அதனை உணர்ந்து மன்னிப்பு எதுவும் கேட்காமல் அலட்சியப்படுத்துவது, குறிப்பாக பெண்களை குறித்து செய்யும் கமெண்ட்கள்… இதை பிரதீப் செய்திருக்க வேண்டாமே என முகம் சுளிக்கும் விதமாக ரசிகர்களையும் பாதித்தது. இப்படியாக கடந்த வாரத்தில் பிரதீப் ஆண்டனி மீது எக்கச்சக்கமான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட நிலையில் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது போட்டியாளர்கள் அனைவரும் கையில் சிகப்பு நிற உரையை அணிந்து உரிமை குரல் எழுப்புவதற்காக தயாராக இருந்தனர். அவர்கள் அத்தனை பேருடைய குற்றச்சாட்டும் பிரதீப்பை நோக்கி மட்டுமே இருந்தது.

போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பிரதீப் ஆண்டனி குறித்து பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளை முன் வைத்துக் கொண்டிருந்தனர். அந்த வகையில் மணி பேசியபோது கழிவறையில் சிறுநீர் கழிக்கும் போது கதவை மூடாமல் இருக்கிறார் என்ற ஒரு குற்றச்சாட்டை வைத்தார். அது குறித்து கேட்ட போதும் “முன்னால் வந்தா பார்க்கப் போகிறார்கள்” என மிகவும் அலட்சியமாக பிரதீப் ஆண்டனி பதில் அளித்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. ஆண்களோடு சேர்ந்து பெண்களும் ஒன்றாக இருக்கும் ஒரு பிக் பாஸ் வீட்டின் கழிவறையை ஆண்களுக்கான தனிப்பட்ட கழிவறை போன்று பயன்படுத்துவது சரியல்ல என்ற மணியின் வாதத்திற்கு பிரதீப் ஆண்டனி திமிராக பதில் அளித்தது அவர் மீதி இருந்த அத்தனை நல்ல மதிப்புகளையும் உடைத்தது. ஒரு புறம் மற்ற ஹவுஸ் மேக்ட்கள் எல்லோரும் பிரதீப்புக்கு எதிராக பேசிய போதும் பிரதீப்புக்கு ஆதரவாக அவருக்கு ஒரு வாய்ப்பு அளிக்கலாம் என்பது போலவும் பிரதீப் ஆரம்பத்திலிருந்து இந்த தவறை செய்து வருகிறார் என்னிடமும் செய்தார் நான் அப்போதே கண்டித்தேன் அதையே எல்லோரும் செய்து இருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது என்ற வாதம் கொஞ்சம் நியாயமாக தான் இருந்தது.

‘மற்றவர்களை பயமுறுத்துவது போல பல விஷயங்களை செய்கிறார்”, ‘கெட்ட வார்த்தைகள் பேசுகிறார்’, ‘மிகவும் மட்டமாக பாலியல் சீண்டல்கள் பேசுகிறார்’, ‘பெண்களை மிகவும் தரக்குறைவாக பேசுகிறார்’, ‘இரவு நேரங்களில் தூங்காமல் வெறித்து பார்த்தபடி உட்கார்ந்து இருக்கிறார்’, ‘மக்களின் ஆதரவு நிறைய இருப்பதாக உணர்ந்து கொண்டு மிகவும் துணிச்சலோடு விளையாடுகிறார்’ ‘அதனாலேயே அவரை எதிர்பார்த்து மிகவும் தயக்கமாக இருக்கிறது’, ‘மூளை சலவை செய்கிறார்’ என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே அழைத்து உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் விசாரித்த போது அதில் பெரும்பான்மையான போட்டியாளர்கள் பிரதீப் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதற்கான நியாயமான குற்றச்சாட்டுகளை துணிச்சலோடு முன்வைத்து ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்பதை ஆதரித்தனர். 

இதனை அடுத்து பெண்களின்  பாதுகாப்பு முக்கியம் என்பதை கருதி பிரதீப் ஆண்டனியை வெளியேற்றும் முடிவை எடுத்த சமயத்தில் கூட கமல்ஹாசன் அவர்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்த போதும் பிரதீப் மிகவும் கோபமாகவும் தன் தவறை உணராத படியும் நடந்து கொண்டது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்ததது. அந்த சமயத்திலாவது எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் என் தரப்பில் தவறுகளை திருத்திக் கொள்கிறேன் என்பது போல பேசாமல் பிரதீப் வெளியேறியது பல ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் கொடுத்தது. ஒருபுறம் பிரதீப் ஆண்டனி வெளியேறியது நியாயம்தான் என்ற ஒரு தரப்பு மிக வலுவாக இருக்கிறது. அவர் செய்த செயல்களை வைத்து பேசும்போது அவருக்கு அளிக்கப்பட்ட இந்த ரெட் கார்ட் சரியா தவறா என்று பார்த்தால் மிகச் சரி என்ற கோணத்தில் தான் அவர் செய்த விஷயங்கள் அதிகமாக இருக்கின்றன. இருப்பினும் ஒரு திறமையான போட்டியாளராக பிக் பாஸை அணுகி தனது விளையாட்டை மிக சிறப்பாக விளையாடி வந்த பிரதீப் ஆண்டனி சில தவறுகளை சரி செய்திருந்தாலும் சில இடங்களில் சில விஷயங்களை செய்யாமல் தவிர்த்து இருந்தாலோ இந்த பிக் பாஸ் சீசனில் கட்டாயமாக டைட்டில் வின்னராக வருவதற்கான அத்தனை தகுதிகளும் பெற்றவர் என்பதால் அவரது இந்த திடீர் வெளியேற்றம் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் கொடுத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். 

எது எப்படியாக இருந்தாலும் இந்த பிக் பாஸ் விளையாட்டில், மிகுந்த ஆவேசத்தோடு வரம்பை மீறி விளையாடுவது, மற்றவர்களை கொச்சைப்படுத்துவது, கெட்ட வார்த்தை பேசுவது, பெண்களை தரக்குறைவாக பேசுவது, வெளியில் மக்கள் கை தட்டுவதால் எனக்கு ஆதரவு இருக்கிறது என்ற மிதமிஞ்சிய தன்னம்பிக்கையில் உள்ளே போட்டியாளர்களை அச்சுறுத்தி விளையாடுவது போன்ற விஷயங்கள் மற்றவர்களுக்கு ஒரு தவறான முன் உதாரணமாக அமைந்து விடக்கூடாது என்ற கண்ணோட்டத்திலும், அனைத்து வயதினரும் பார்க்கும் நிகழ்ச்சி என்ற கண்ணோட்டத்திலும், இனி வரக்கூடிய போட்டியாளர்கள் வரம்பு மீறாமல் விளையாட வேண்டும் என்ற விஷயத்திலும் பிரதீப் ஆண்டனிக்கு கொடுக்கப்பட்ட ரெட் கார்ட் மிகச் சரி என்பது பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது.