தெலுங்கு திரையுலகில் பிரபல கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஹம்ச நந்தினி. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களின் பல திரைப்படங்களுக்கு ஒரு பாடலுக்கு குத்தாட்டம் நடனமாடியும் முக்கிய கதாபாத்திரங்களிலும் ஹம்ச நந்தினி நடித்து வந்தார்.

குறிப்பாக எஸ்.எஸ்.ராஜமவுலியின் நான் ஈ, பிரபாஸ் கதாநாயகனாக நடித்த மிர்ச்சி, ஜூனியர் என்டிஆரின் ராமையா வஸ்தாவையா மற்றும் ஜெய் லவ குசா, பாலையாவின் லெஜன்ட், அனுஷ்காவின் ருத்ரம்மாதேவி, ரவி தேஜாவின் பெங்கால் டைகர் உள்ளிட்ட பல திரைப்படங்களில்  நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ஹம்ச நந்தினி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சை எடுத்து வரும் ஹம்ச நந்தினி தலைமுடி இல்லாத தனது புகைப்படத்தை பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளார். 4 மாதங்களுக்கு முன்பு மார்பகத்தில் இருந்த சிறிய கட்டி காரணமாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மார்பக புற்றுநோய் உறுதி செய்யப்பட்டதை அடுத்து உடனடியாக மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சைகளை தொடங்கிய ஹம்ச நந்தினி புற்றுநோயில் 3-வது நிலையில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில் புற்றுநோய் கட்டி வெற்றிகரமாக நீக்கப்பட்டுள்ளது. மேலும், விரைவில் கண்டறியப்பட்டு உடனடியாக அறுவை சிகிச்சையை மேற்கொண்டதாலும் மேற்கொண்டு நோய் பரவல் இல்லாத காரணத்தாலும் விரைவில் குணமடைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

9 நிலைகளாக நடைபெற உள்ள கீமோதெரபியில் இன்னும் 7 நிலைகள் நடைபெற உள்ளது எனவே விரைவில் குணமடைந்து இன்னும் பலமாக உறுதியாக மீண்டும் திரை உலகில் களம் இறங்குவேன் என ஹம்ச நந்தினி தெரிவித்துள்ளார். ஹம்ச நந்தினி விரைவில் குணமடைந்து வர கலாட்டா குழுமம் சார்பாக வேண்டுகிறோம்.