தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் பொன்வண்ணன் கருத்தம்மா, பசும்பொன், எட்டுப்பட்டி ராசா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலம் அடைந்தார். அடிப்படையில் சிறந்த எழுத்தாளரான பொன்வண்ணன் புது நெல்லு புது நாத்து வசனகர்த்தாவாகவும் அன்னை வாயில் மற்றும் கோமதி நாயகம் உள்ளிட்ட படங்களை எழுதி இயக்கியும் உள்ளார். 

இயக்குனர் அமீரின் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த பருத்திவீரன், இயக்குனர் மிஷ்கினின் இயக்கத்தில் அஞ்சாதே, இயக்குனர் கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த அயன்,கடைசியாக நடிகர் கார்த்தி நடிப்பில் சுல்தான் திரைப்படம் என தமிழ் சினிமாவின் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
 
பொன்வண்ணனின் மனைவியான சரண்யா பொன்வண்ணன் தென்னிந்திய திரையுலகின் மிக முக்கிய நடிகையாக திகழ்கிறார். தற்போதய தென்னிந்திய சினிமாவில் அனைத்து முன்னணி நட்சத்திர நடிகர்களுக்கு சரண்யா பொன்வண்ணன் அம்மாவாக நடித்திருப்பார். தவமாய் தவமிருந்து, எம் மகன், தென்மேற்கு பருவக்காற்று, கோலமாவு கோகிலா, ராம், ஒரு கல் ஒரு கண்ணாடி, வேலையில்லா பட்டதாரி, களவாணி என தொடர்ந்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் சரண்யா பொன்வண்ணன். 

இந்நிலையில் நடிகர் பொன்வண்ணன் மற்றும் சரண்யா பொன்வண்ணன் தம்பதிகளின் மகள் பிரியதர்ஷினியின் திருமண வரவேற்பு நிகழ்வு நேற்று நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில் தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் பல திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.