விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நகைச்சுவை தொடரில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நடிகர் யோகிபாபு தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்திருக்கிறார். மான்கராத்தே, காக்கி சட்டை, காக்காமுட்டை என தொடர் வெற்றி திரைப்படங்களில் நடித்து  பிரபலமடைந்த  யோகிபாபு ஆண்டவன் கட்டளை, ரெமோ,  கோமாளி உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் அசத்தி வருகிறார். 

தளபதி விஜயின் மெர்சல், சர்க்கார், பிகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் அஜித்குமாரின் வீரம் என தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களோடும் நடித்துவரும் யோகிபாபு குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி வருகிறார். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார் நடிகர் யோகிபாபு.

கதாநாயகனாகவும் கூர்கா, தர்மபிரபு ,கோலமாவு கோகிலா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்த யோகி பாபு நடித்து சமீபத்தில் வெளியான மண்டேலா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. யோகி பாபுவின் எதார்த்தமான நடிப்பு இத்திரைப்படத்தில் அனைவரையும் கவனிக்க வைத்தது என சொல்லலாம்.

நாடு முழுவதும் பலருக்கும் இன்றும்  கொரோனா தடுப்பூசி பற்றிய குழப்பமும் பயமும் இருந்து வரும் நிலையில் பல பிரபலங்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தங்களால் முடிந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.அந்த வகையில் நடிகர் யோகிபாபு தடுப்பூசி எடுத்து கொண்ட புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். 

யோகி பாபு தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அடுத்ததாக நடிகர் யோகிபாபு அஜித்குமாரின் வலிமை, தளபதி 65 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.