கன்னட திரை உலகில் கதாநாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்த சஞ்சாரி விஜய்  இன்று காலை உயிரிழந்துள்ளார்.மறைந்த நடிகர் சஞ்சாரி விஜய்க்கு வயது 38.2015 ஆம் ஆண்டு வெளிவந்த நானு அவனல்லா அவளு என்ற திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். திருநங்கை கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் சஞ்சாரி விஜய் இத்திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் என்பது குற்ப்பிடத்தக்கது. 

கடந்த ஜூன் 12ஆம் தேதி இரவு ஜே.பி.நகரில் தனது நண்பரோடு இருசக்கர வாகனத்தில்  மருந்து வாங்குவதற்காக சென்ற நடிகர் சஞ்சாரி விஜய் L&T சவுத் சிட்டி அருகில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியது. வாகனத்தை இயக்கி வந்த சஞ்சாரி விஜய்யின் நண்பர் மிதமான காயங்களோடு தப்பிக்க பின்னால் அமர்ந்திருந்த நடிகர் சஞ்சய் விஜய்க்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உயிருக்கு போராடிய நிலையில் நடிகர் சஞ்சாரி விஜய்யை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சஞ்சாரி விஜய் உயிர் பிழைத்து வரவேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சஞ்சாரி விஜய் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  

இதுகுறித்து  கன்னட  சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் “சஞ்சாரி விஜயின் உயிரிழப்பு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்குக்கு முன்பாக தான் இருமுறை சந்தித்தோம் அடுத்து வெளிவர உள்ள திரைப்படத்தைப் பற்றி உற்சாகமாக பேசிக் கொண்டோம். திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாக உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தத்தை அளித்துள்ளது. அவருடைய குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என நடிகர் கிச்சா சுதீப் நடிகர் சஞ்சய் விஜய்க்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். 

நடிகர் சஞ்சாரி விஜய் நடித்த ஆட்டகுண்டா லேகக்கில்லா மற்றும் மேலோபா மாயாவி ஆகிய திரைப்படங்கள் அடுத்து வெளிவர உள்ள நிலையில்  நடிகர் சஞ்சாரி விஜய்யின் மரணம் பெரும் சோகத்யை ஏற்படுத்தியுள்ள நிலையில் திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.