தமிழ் திரையுலகில் முன்னணி டப்பிங் கலைஞரும் நடிகருமான காளிதாஸ் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களுக்கு ஆக்ரோஷமான வில்லன்களின் குரலாக ஒலித்தவர்.  டப்பிங் துறையில் தனி முத்திரை பதித்த காளிதாஸ் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

குறிப்பாக வைகைப்புயல் வடிவேலு நடித்த பல நகைச்சுவை காட்சிகளில் காவல்துறை அதிகாரியாக அசத்தியிருப்பார் காளிதாஸ்.  மேலும் சின்னத்திரையிலும் பல முன்னணி தொலைக்காட்சிகளின் மெகா தொடர்களில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னை போரூரில் வசித்து வந்த நடிகர் காளிதாஸ் திடீரென இன்று காலமானார்.  கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக மிகவும் அவதிப்பட்டு வந்த நடிகர் காளிதாஸ் இன்று உயிரிழந்துள்ளார். இது குறித்து பிரபல தமிழ் நடிகர் மோகன்ராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அந்த பதிவில் அந்தக் குரலை இனி நாம் ஒருபோதும் கேட்கப்போவதில்லை டப்பிங் கலைஞரும் நடிகருமான காளிதாஸ் காலமானார். தனது கணீர் குரல் மூலமாக பல வில்லன்களின் நடிப்பிற்கு உயிர் கொடுத்த காளிதாஸ் உயிரிழந்தார்... ஓம் சாந்தி. என தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் நடிகர் காளிதாஸ்-ன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.