திரிஷ்யம் 2 திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி சக்கைப் போடு போட்டு வருகிறது. இந்நிலையில், திரிஷ்யம் 3 படம் உருவாக உள்ளதை நடிகர் மோகன் லால் இரண்டு போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்துள்ளார்.

அடுத்த பாகத்தில் ஜார்ஜ் குட்டி கைதாவாரா? அல்லது மீண்டும் தனது சினிமா மூளையை பயன்படுத்தி குடும்பத்தை மறுபடியும் காப்பாற்றுவாரா? என்கிற கோணத்தில் இந்த போட்டோக்களை மோகன் லால் ரிலீஸ் செய்துள்ளார்.

அமேசான் பிரைமில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி வெளியான திரிஷ்யம் 2 படத்தை பற்றி தான் இந்திய திரையுலகமே வியந்து பேசி வருகிறது. மலையாள மொழியே தெரியாமல் ஏகப்பட்ட வட இந்தியர்கள் கூட முதன் முறையாக ஒரு மலையாள படத்தை ஒடிடி தளத்தில் பார்த்து விட்டு பாராட்டி வருகின்றனர்.

திரிஷ்யம் 2 திரைப்படத்தின் அசுர வெற்றியை பார்த்த அடுத்த நொடியே டோலிவுட் நடிகர் வெங்கடேஷ் திருஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்கின் பணிகளை தொடங்கி விட்டார். மேலும், திரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பை வைத்தே இம்முறை தெலுங்கிலும் படம் எடுக்க தீர்மானித்து விட்டார். மீனா தான் இம்முறையும் வெங்கடேஷுக்கு ஜோடி.

அதே போல தமிழ் ரசிகர்களும் பாபநாசம் 2ம் பாகத்தை உருவாக்க வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் செல்லும் இடங்களில் எல்லாம் கோரிக்கை வைக்க துவங்கி விட்டனர். விக்ரம் படத்தில் பிசியாகி உள்ள கமல், பாபநாசம் 2ம் பாகத்தை தொடங்குவாரா? இல்லையா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பிக் பாஸ் 5 வேற ஆரம்பிக்க போகிறதாம்.

இரண்டாம் பாகம் இந்தியா முழுவதும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வரும் நிலையில், ஜீத்து ஜோசப்பின் குடும்ப புகைப்படத்தை வைரலாக ஷேர் செய்து, நிஜமாகவே ஜீத்துவின் கதை தானா? திரிஷ்யம் என்கிற கோணத்தில் ஏகப்பட்ட மீம்களையும் ரசிகர்கள் தெறிக்கவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் பாகத்திலேயே முடிந்து போன ஒரு கதையை மீண்டும் தோண்டியெடுத்து இரண்டாம் பாகத்தை இப்படியொரு ஹிட் படமாக கொடுக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய மூளைக்கார ஜீத்து ஜோசப் 3வது பாகத்தையும் உருவாக்க உள்ளார் என்பது ரசிகர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி தான்.

தனது குடும்பத்தை காப்பாற்ற ஒரு சராசரி மனிதன் இப்படியொரு கிளாசிக் கிரிமினலாக மாறுவானா? என்பது நிஜ வாழ்க்கையில் நடக்காத விஷயம் என்றாலும், ஜார்ஜ் குட்டியின் அடுத்த ராஜதந்திர அட்டாக்கை காண ரசிகர்கள் ஆவலுடன் தான் காத்திருக்கின்றனர். இந்நிலையில், அடுத்தது என்ன? அரெஸ்ட்டா அல்லது எஸ்கேப்பா என்பது போல கையில் விலங்கு பூட்டியும் பூட்டாமலும் ஸ்டேஷனில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி உள்ளார் மோகன் லால்.