கோவில்பட்டியில் பிரபல ரவுடி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள போஸ் நகரைச் சேர்ந்த 39 வயதான மாணிக்கராஜா, அந்த பகுதியில் பிரபல ரவுடியாக அறியப்பட்டவர். இவர் மீது கோவில்பட்டி காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட 56 வழக்குகள் உள்ளன.

rowdy encounter

இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுமதியின்றி, பட்டாசு ஆலை நடத்தியது தொடர்பாகக் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். 

இந்நிலையில், கோவில்பட்டி அருகே உள்ள கார்த்திகைபட்டியில், மாணிக்கராஜாவுக்கு சொந்தமான ஒரு தோட்டத்தில் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனால், கோவில்பட்டி தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையிலான சிறப்புப் படையினர் மாணிக்கராஜாவுக்கு சொந்தமான தோட்டத்தில் சோதனையிடச் சென்றனர். அப்போது தோட்டத்திற்குள் மறைந்திருந்த மாணிக்கராஜா, போலீசாரை ஆயுதங்களால் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இதில் காவலர்கள் செல்வகுமார் மற்றும் முகமது மைதீன் ஆகியோர் பலத்த காயமடைந்ததாகவும் தெரிகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த போலீஸ் இசக்கிராஜா,  தற்காப்பு நடவடிக்கையாக, தான் வைத்திருந்த துப்பாக்கியால் மாணிக்கராஜாவின் காலில் சுட்டுள்ளார். இதில், படுகாயம் அவர் அடைந்த வலி தாங்க முடியாமல் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார்.

rowdy encounter

பின்னர், மாணிக்கராஜாவை கைது செய்த போலீசார்,   அவரை மீட்டு பாளையங்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், படுகாயம் அடைந்த 2 காவலர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே, சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரபல ரவுடி மணிகண்டன் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தற்போது தூத்துக்குடியில் ரவுடி மாணிக்கராஜா மீது துப்பாக்கிச் சூடு நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் 2 நாட்களில் ரவுடிகளை குறிவைத்து அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு வரும் சம்பவம், ஒட்டுமொத்த ரவுடிகள் மத்தியிலும் பீதியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.