தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த திரைப்படங்கள் பட்டியலில் கட்டாயம் இடம் பெறக்கூடிய ஒரு திரைப்படம் என்றால் அது விக்ரம் வேதா. இயக்குனர்கள் புஷ்கர்-காயத்ரி இணைந்து எழுதி இயக்கிய விக்ரம் வேதா திரைப்படம் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியானது.Y NOT ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் சசிகாந்த் தயாரித்த விக்ரம் வேதா திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் P.S.வினோத் ஒளிப்பதிவு செய்ய சாம்.C.S இசையமைத்திருந்தார்.

இந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகரான R.மாதவன் , விக்ரம் கதாபாத்திரத்திலும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வேதா கதாபாத்திரத்திலும் கன கட்சிதமாக நடிக்க இவர்களுடன் ஸ்ரத்தா ஸ்ரீநாத், கதிர், வரலட்சுமி சரத்குமார், மணிகண்டன், பிரேம்குமார், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

GST வரி அமலுக்கு வந்து சினிமா டிக்கெட்டுகளின் விலை உயர்ந்த சமயத்திலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி மாபெரும் வெற்றிப் படமானது. அன்றுமுதல் இத்திரைப்படத்தின்  தெலுங்கு மற்றும் ஹிந்தி ரீ-மேக் குறித்து பல செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது விக்ரம் வேதா படத்தின் பாலிவுட் ரீமேக் உறுதியாகியுள்ளது.
 
விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி இருவருமே ஹிந்தி ரீமேக்கையும் இயக்குகிறார். பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான ரித்திக் ரோஷன் மற்றும் சைஃப் அலிகான் இருவரும் விக்ரம் மற்றும் வேதா கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. 

விரைவில் இதன் படப்பிடிப்புகள் துவங்கப்பட்டு,  2022ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.