பார்க்கிங் SNEAK PEEK: ஹரிஷ் கல்யாண் - MS பாஸ்கர் பட ரிலீசுக்கு முன் வந்த விறுவிறுப்பான ஸ்பெஷல் வீடியோ இதோ!

ஹரிஷ் கல்யாண் MS பாஸ்கரின் பார்க்கிங் பட SNEAK PEEK,harish kalyan indhuja in parking movie sneak peek out now | Galatta

நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் MS பாஸ்கர் இணைந்து நடித்திருக்கும் பார்க்கிங் திரைப்படத்தின் SNEAK PEEK வீடியோ வெளியானது. அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து கதையின் நாயகியாக பார்க்கிங் திரைப்படத்தில் இந்துஜா நடித்திருக்கிறார். தொடர்ந்து இளம் ரசிகர்களின் மனம் கவர்ந்த கதாநாயகனாக அடுத்தடுத்து நல்ல படங்களை கொடுத்து வரும் ஹரிஷ் கல்யாணின் வழக்கமான திரைப்படங்களின் தளத்திலிருந்து கொஞ்சம் மாறுபட்டு அதே சமயம் ஒரு வித்தியாசமான எதார்த்தமான கதை களத்தில் இருக்கும் இந்த பார்க்கிங் திரைப்படம் ஹரிஷ் கல்யாண் திரை பயணத்தில் நிச்சயம் ஒரு குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அந்த கதாபாத்திரமாகவே ஒட்டுமொத்த ரசிகர்களையும் உணர வைக்கும் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான MS.பாஸ்கர் அவர்கள் இந்த திரைப்படத்திலும் அப்படி ஒரு தரமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது சமீபத்தில் வெளிவந்த ட்ரெய்லரின் மிகத் தெளிவாக தெரிந்தது. மேயாத மான், பிகில், நானே வருவேன் படங்களுக்கு பிறகு நடிகை இந்துஜா திரை பயணத்தில் ஒரு முக்கிய படமாக இந்த பார்க்கிங் அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ராமா & பிரார்த்தனா ஆகியோர் பார்க்கிங் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ஒரே வீட்டில் இரண்டு போர்ஷன்களில் குடியிருக்கும் இருவருக்கு இடையிலான கார் பார்க்கிங் தொடர்பான ஈகோ பிரச்சனையை இந்த பார்க்கிங் திரைப்படம். திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்து ஐடி துறையில் வேலை பார்க்கும் ஹரிஷ் கல்யாண் தனக்கு பிடித்த கார் ஒன்றை வாங்குகிறார். அந்த காருக்கான பார்க்கிங் கிடைக்காமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார். அவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளராக வரும் MS.பாஸ்கர் ஹரிஷ் கல்யாணின் காரை அந்த வீட்டின் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்த கூடாது என்கிறார். தொடர்ந்து அங்கே கார் நிறுத்தப்படவே அவர் ஒரு புதிய காரை கொண்டு வந்து அங்கே நிறுத்த அந்த பார்க்கிங்கே பிரச்சனையாகிறது. இதை அடுத்து ஹரிஷ் கல்யாண் மற்றும் MS.பாஸ்கர் இடையிலான பார்க்கிங் சம்பந்தப்பட்ட இந்த ஈகோ காரணமாக வரும் அடுத்தடுத்த பிரச்சனைகளை பேசக்கூடிய ஒரு படமாக இருக்கும் பார்க்கிங் திரைப்படத்திற்கு ஜிஜு சன்னி ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார். 

இந்த நிலையில் பார்க்கிங் திரைப்படத்திலிருந்து SNEAK PEEK வீடியோ ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. ஏற்கனவே கூறியபடி பார்க்கிங் பிரச்சனையை மையப்படுத்திய கதைக்களம் என்பதால் அதை மையப்படுத்திய ஒரு விறுவிறுப்பான காட்சியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளனர். தனது ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஹரிஷ் கல்யாண் தனது கடிகாரத்தை பார்த்து விட்டு உடனடியாக லேப்டாப்பை மூடி எடுத்து வைத்து வேகமாக கிளம்புகிறார். அதே போல் அரசு அதிகாரியாக அரசு அலுவலகத்தில் பணியாற்றி வரும் MS.பாஸ்கர் கடிகாரத்தை பார்த்துவிட்டு அவசரம் அவசரமாக அங்கிருந்து கிளம்புகிறார். இருவரும் வெவ்வேறு பாதையில் வீட்டை நோக்கி வருகிறார்கள். யார் முதலில் பார்க்கிங் ஏரியாவை பிடிப்பது என்ற முனைப்போடு விரைந்து வருகிறார்கள். இருவரும் ஒரே சமயத்தில் தெருவுக்குள் நுழைகிறார்கள். எதிர் எதிரே ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு இன்னும் வேகமாக வந்து வீட்டு வாசலில் காரை நிறுத்துகிறார்கள். வீட்டின் கதவு திறக்கப்படுகிறது யார் முதலில் உள்ளே நுழைந்தார் என்ற கேள்வியோடு இந்த வீடியோ முடிகிறது. இதற்கான பதிலை வருகிற டிசம்பர் 1ம் தேதி நாளை மறுநாள் திரையரங்குகளில் கண்டு ரசியுங்கள். தற்போது வெளிவந்திருக்கும் பார்க்கிங் திரைப்படத்தின் விறுவிறுப்பான SNEAK PEEK வீடியோ இதோ…