தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் வெயில் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து பொல்லாதவன், அங்காடித்தெரு, ஆயிரத்தில் ஒருவன், மதராசபட்டினம், ஆடுகளம் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த இசை அமைப்பாளராக உள்ளார்.
 
மேலும் சீயான் விக்ரமின் தெய்வத்திருமகள், தளபதி விஜய்யின் தலைவா, தெறி, இயக்குனர் வெற்றிமாறனின் விசாரணை, அசுரன் சூர்யாவின் சூரரைப்போற்று என பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசை அமைத்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்கிறார். இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் நடிகராகவும் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமியின் படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். தொடர்ந்து சிறந்த படங்களை கொடுத்து வரும் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் அடுத்ததாக மீண்டும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்திருக்கும் மாமனிதன் திரைப்படம் தயாராகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்தில் நடிகர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கிறார். ஸ்கை மேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பாளர் முபாரக் தயாரிக்கும் இரண்டாவது திரைப்படமாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நடிக்கும் இந்த புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. 

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குனர் சீனு ராமசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இசை அமைப்பாளர் N.R.ரகுநாதன் இசை அமைக்க கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.