பீட்சா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான கார்த்திக் சுப்பராஜ் ஜிகர்தண்டா,இறைவி, மெர்குரி என தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் ரசிகர்களின் கற்பனைக்கு எட்டாத  திரைக்கதை அமைப்பதில் வல்லவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்பராஜ் கடைசியாக இயக்கிய பேட்ட திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. 

இந்நிலையில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ்  ஜகமே தந்திரம் படம் மூலம் தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷுடன் இணைந்தார்.YNOT  ஸ்டூடியோஸ் S.சசிகாந்த் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும்  ஜகமே தந்திரம் திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், கலையரசன் என பலர் நடிக்க இவர்களோடு இணைந்து பிரபல ஹாலிவுட் தொடரான Game Of Thrones புகழ் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ நடித்துள்ளார். 

உலகின் பல முக்கிய நகரங்களில்  படமாக்கப்பட்ட, கேங்ஸ்டர் கதை களத்தை கொண்ட ஜகமே தந்திரம் திரைப்படத்தில் பணியாற்றியது குறித்து ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ தற்போது மனம் திறந்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜேம்ஸ் காஸ்மோ ஜகமே தந்திரம் படக்குழுவுடன் பணியாற்றியது சிறப்பான அனுபவமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டது மிக மகிழ்ச்சியாக இருந்ததாகவும்,  இந்தியா மிக அருமையான நாடு. உங்களோடு பணியாற்றியதில் நான் மிகவும் உற்சாகமாக உணர்கிறேன்.  என தெரிவித்துள்ளார். 

கேங்ஸ்டர் திரைப்படங்களின் மீது அதிக ஈர்ப்பு கொண்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள கேங்க்ஸ்டர் திரைப்படமான ஜகமே தந்திரம் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை தியேட்டரில் கொண்டாட ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இத்திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் ஜூன் 18-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.