சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் படம் ஈஸ்வரன். இந்த படத்திற்காக சிம்பு தன் உடல் எடையை வெகுவாக குறைத்து செம ஃபிட்டாக காணப்பட்டார். ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து வருகிறார். படத்திற்கு தமன் இசையமைக்கிறார். 

கிராமத்து பின்னணி கொண்ட ஈஸ்வரன் படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல் பகுதியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை முடிக்கவிருக்கிறார் சுசீந்திரன். ஈஸ்வரன் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸாகவிருக்கிறது. ஒரு மாதத்தில் படப்பிடிப்பை முடித்து ஒரு படம் ரிலீஸாகிறதா என்று தான் அனைவரும் வியப்பில் இருக்கிறார்கள்.

ஈஸ்வரன் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்ற ஆவல் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் முன்பு வரை சிம்புவின் முகத்தை யாராலும் பார்க்க முடியவில்லை. ஷூட்டிங்ஸ்பாட்டுக்கு யாரும் செல்போன் கொண்டு வரக் கூடாது என்று கூறிவிட்டார் சுசீந்திரன். சமீபத்தில் கேரவனில் இருந்து சிம்பு வெளியே வர அவரை பார்க்க கூடியிருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. ஃபிட்டாக இருக்கும் சிம்புவை எத்தனை முறை பார்த்தாலும் போதவில்லை, மீண்டும் மீண்டும் பார்க்க ஆசையாக இருக்கிறது என்றனர் ரசிகர்கள்.

ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததாக நடிகர் சிலம்பரசன் நேற்று பதிவு செய்தார். மேலும் ஈஸ்வரன் படத்தின் டீஸர் வரும் தீபாவளி நாளில் வெளியாகும் என்றும் கூறியிருந்தார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் சிலம்பரசன் ரசிகர்கள். படத்தின் இசையமைப்பாளர் தமன், ஈஸ்வரன் படத்தின் இசை பணிகளை துவங்கிவிட்டார். விரைவில் பாடல் குறித்த அப்டேட்டுகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சில தினங்களுக்கு முன்பு ஈஸ்வரன் படப்பிடிப்புத் தளத்தில் சிம்பு பாம்பு பிடிப்பது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. இது சிம்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகப் பரவியது. அதே வேளையில், இந்தக் காட்சி தொடர்பாக சமூக ஆர்வலர்ஒருவர் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். இதனால் சிம்பு படத்துக்கு மீண்டும் சிக்கல் என்கிற ரீதியில் செய்திகளும் வெளியாகின.

தற்போது பாம்பு பிடித்த காட்சி தொடர்பான சர்ச்சைக்கு, ஈஸ்வரன் படக்குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் உண்மையில், அந்தக் காட்சி போலியான ப்ளாஸ்டிக் பாம்பு போன்ற ஒன்றை வைத்து படமாக்கினோம். அது படத்தில் நிஜ பாம்பு போன்று கிராபிக்ஸ் செய்யப்படவுள்ளது. இந்தக் காட்சியைப் பற்றிய செய்தியையும், புகைப்படத்தையும் தயாரிப்பு நிறுவனம் சார்பாகவோ மற்றவர்கள் மூலமாகவோ அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. கணினி கிராபிக்ஸ் செய்யும் போது இந்த வீடியோ சில நபர்களால் கசிந்துள்ளது. எங்கள் தரப்பிலிருந்து காட்சிகள் எவ்வாறு கசிந்தன என்பதை நாங்கள் அதைப் பற்றி விசாரித்து வருகின்றோம். 

இது சம்பந்தமாக சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த புகார் தொடர்பாக, வனத்துறை அதிகாரி கிளமண்ட் எடிசன் எங்களை விசாரணைக்கு அழைத்தார், நாங்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து எங்கள் தரப்பு விளக்கத்தை தெளிவு படுத்தினோம். அதற்கு உண்டான ஆதாரங்களை விரைவில் சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளோம். படத்தின் முழு படப்பிடிப்பும் தமிழக அரசின் வழிகாட்டிதலைக் கடைப்பிடித்து நடைபெற்று வருகிறது. படம் சம்பந்தப்பட்ட செய்திகள், புகைப்படங்கள் அனைத்தும் ஊடகங்களுக்கு முறையாக அனுப்பி வைக்கப்படும் என்று ஈஸ்வரன் படக்குழு தெரிவித்துள்ளது.