காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன என செல்வராகவனுடன் இணைந்து தனுஷ் நடித்த அனைத்து திரைப்படங்களும்  ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தவறியதே இல்லை. புதுப்பேட்டை 2 இன்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் நிலையில் இயக்குனர் செல்வராகவனும் விரைவில் புதுப்பேட்டை 2 தயாராகும் என தெரிவித்திருந்தார். 

மேலும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கிறார். இதற்கிடையே அசுரன் மற்றும் கர்ணன் திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படத்தையும் இயக்குனர் செல்வராகவன் இயக்குகிறார் என்ற தகவலும் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

முன்னதாக சில மாதங்களுக்கு முன்  நானே வருவேன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அன்றிலிருந்து ரசிகர்கள் அனைவரும் நானே வருவேன் திரைப்படத்திற்காக ஆவலோடு காத்திருந்த நிலையில் தற்போது நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு பற்றிய முக்கிய தகவல் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. 

இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகவுள்ள நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதியிலிருந்து துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.