சுஷாந்த் சிங் மரணத்தை அடுத்து அவர் காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டார். பண மோசடி குறித்து அவரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது நடிகை ரியா சக்கரவர்த்தியின் வாட்ஸ்-அப் உரையாடல்களை ஆய்வு செய்த போது, அவருக்கும் போதைப் பொருள் கும்பலுக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. தனது தம்பி சோவிக் மூலம் ரியா, போதைப்பொருளை வாங்கி மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு கொடுத்துள்ளார்.

இதையடுத்து ரியா, அவர் சகோதரர் சோவிக், சாமுவேல் மிரண்டா உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தி திரையுலகைச் சேர்ந்த சிலருக்கும் போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

நடிகைகள் ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோன், ஷரத்தா கபூர், சாரா அலி கான் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனால் அவர்களுக்குச் சம்மன் அனுப்பினர். அதன்படி நடிகைகள் ரகுல் பிரீத் சிங்கிடம் சுமார் 4 மணி நேரமும் தீபிகா படுகோனிடம் 5 மணி நேரமும் விசாரணை நடத்தப்பட்டது.

ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இவர்கள் அனைவரும் தாங்கள் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்று கூறியுள்ளனர். இதற்கிடையே, விசாரணைக்கு வந்த தீபிகா படுகோன், ஷ்ரத்தா, சாரா அலிகான், ரகுல் பிரீத் சிங் ஆகியோரின் செல்போன்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணைக்காக பறிமுதல் செய்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் விசாரணையில் சொல்லி வைத்த மாதிரி ஒன்று போலவே பதில் அளித்துள்ளனர். இதனால், அவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்பி விசாரிக்க போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, நடிகை ரியா சக்கவர்த்தியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடக்க இருக்கிறது.

இந்த ஆண்டு வெளியான சபாக் திரைப்படம் தீபிகாவுக்கு சிறப்பான பெயரை பெற்று தந்தது. கபீர் கான் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் 83 படத்தின்  தயாரிப்பு பணிகளையும் மேற்கொண்டார் தீபிகா படுகோன். இதைத்தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக ஒரு பிரம்மாண்ட படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். பிரபாஸ் 21 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் அந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சாரா அலிகான் கைவசம் அத்ரங்கி ரே திரைப்படம் உள்ளது. ஆனந்த் எல். ராய் இயக்கிவரும் இந்த படத்தில் தனுஷ் மற்றும் அக்ஷய்குமார் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரகுல் ப்ரீத் கைவசம் இந்தியன் 2 திரைப்படம் உள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் இந்த படத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கிறார். ஷ்ரத்தா கபூர் கடைசியாக பாகி 3 படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து அவர் ஆடை ஹிந்தி ரீமேக்கில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது. இதன் அதிகாரப் பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.