கன்னட சினிமா துறையில் போதை பொருள் பயன்படுத்தியது குறித்த சர்ச்சை வெடித்தது. நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகினி திவேதி கைதாகி தற்போது சிறையில் இருக்கின்றனர். இச்செய்தி ஒட்டு மொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. போதைப்பொருள் சர்ச்சை தற்போது பாலிவுட் சினிமா துறையை உலுக்கி வருகிறது. தீபிகா படுகோன் மற்றும் சில நடிகைகள் போதை பொருள் பயன்படுத்தியதாக விசாரணையில் தகவல்கள் கிடைத்த நிலையில் அதுபற்றி விசாரிக்க அவர்களை நேரில் ஆஜராகும்படி Narcotics Control Bureau NCB சம்மன் அனுப்பியுள்ளது. 

தீபிகா படுகோன் நாளை NCB முன்பு ஆஜராக வேண்டும் என சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்ததால், தற்போது அவர் கோவாவில் ஒரு திரைப்படத்தின் சூட்டிங்கில் பிஸியாக இருந்து வரும் நிலையில் இதற்காக படப்பிடிப்பை நிறுத்தி விட்டு மும்பைக்கு அவசரஅவசரமாக திரும்புகிறார். இன்று மதியம் அவர் ஒரு தனி விமானம் மூலமாக கோவாவிலிருந்து மும்பைக்கே திரும்புகிறார். தற்போது வெளிவந்திருக்கும் தகவல்களின்படி தீபிகா கோவாவில் இருந்து தனி விமானம் மூலமாக ஒன்றரை மணிக்கு கிளம்ப இருக்கிறார். அதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 

மேலும் இந்த விஷயம் தொடர்பாக தனது சட்ட ஆலோசகர்கள் உடன் தீபிகா படுகோன் வீடியோ கான்பரன்சில் உரையாடி இருக்கிறார். அந்த வீடியோ காலில் தீபிகாவின் கணவர் ரன்வீர் சிங் உடன் இருந்தார் என்று கூறப்படுகிறது. தீபிகா விரைவில் மும்பை வந்து சேர உள்ள நிலையில் பிரபல ஃபேஷன் டிசைனர் Simone Khambatta இன்று காலை என்சிபி அலுவலகத்திற்கு வந்திருக்கிறார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அவர் மட்டுமின்றி ரகுல் ப்ரீத் சிங் இன்று நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் தனக்கு அதுகிடைக்கவில்லை என ரகுல் கூறி இருக்கிறார். அதனால் அவர் இன்று ஆஜராக வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. மேலும் நடிகைகள் சாரா அலி கான் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகிய நடிகைகள் நாளை மறுதினம் NCB முன்பு ஆஜராவார்கள் என தெரிகிறது. 

இப்படி பல முக்கிய நடிகைகள் போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கி இருப்பது பாலிவுட் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலி ரியா போதை பொருள் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நிலையில் அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருக்கிறார். அது இன்று விசாரணைக்கு வர உள்ளது. சுஷாந்த் சிங்கிற்கு போதை பொருட்கள் வாங்கி கொடுத்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. கடந்த செப்டம்பர் 8-ம் தேதி ரியா கைதான நிலையில் அப்போது இருந்தே சிறையில் தான் இருக்கிறார்.

அவரிடம் விசாரணை நடத்தியபோது தான் தீபிகா படுகோன், சாரா அலி கான், ரகுல் ப்ரீத் உள்ளிட்ட நடிகைகள் பெயர்கள் சிக்கியதாக தகவல் முன்பே வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு வெளியான சபாக் திரைப்படம் தீபிகாவுக்கு சிறப்பான பெயரை பெற்று தந்தது. கபீர் கான் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் 83 படத்தின்  தயாரிப்பு பணிகளையும் மேற்கொண்டார் தீபிகா படுகோன். இதைத்தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக ஒரு பிரம்மாண்ட படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். பிரபாஸ் 21 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் அந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் இப்படி ஒரு சர்ச்சையில் தீபிகா படுகோன் சிக்கி இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பிரபாஸ் ரசிகர்கள் ஹீரோயினை மாற்றுங்கள் என்று கமெண்ட் செய்வதை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது.