பிரபலமான தமிழ் தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி நடன நிகழ்ச்சிகளில் நடன இயக்குனராக களமிறங்கி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குனராக திகழ்பவர் சாண்டி மாஸ்டர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா, மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் காதலும் கடந்து போகும், நடிகர் சிலம்பரசனின் வாலு மற்றும் சமீபத்தில் வெளியான ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை என திரையுலகிலும் தன்னுடைய முத்திரையை பதித்து வருகிறார் சாண்டி மாஸ்டர்.

அடுத்ததாக தற்போது தமிழ் சினிமாவில் 3:33 திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகிறார். ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் 3:33 படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. இப்படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக விஜய் தொலைக்காட்சியின் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3-இல் போட்டியாளராக கலந்து கொண்ட சாண்டி மாஸ்டர், பக்கா என்டர்தய்னர்-ஆக  அனைவரையும் மகிழ்வித்து பிக் பாஸ் சீசன் 3-ல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து  இரண்டாம் பரிசை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாண்டி மாஸ்டரை ரசிகர்களுக்கு எவ்வளவு பிடித்ததோ அதே அளவுக்கு சாண்டி மாஸ்டரின் செல்லமகளான லாலாவையும் பிடித்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் சாண்டி மாஸ்டர் சமூகவலைதளங்களில் பின்தொடரும் ரசிகர்கள் லாலாவின் க்யூட்டான சேட்டைகளையும் ரசிப்பது உண்டு.

 இந்நிலையில் தற்போது சாண்டி மாஸ்டர் மீண்டும் தந்தையாகி இருக்கிறார். ஆம்! சாண்டி மாஸ்டருக்கு அழகிய ஆண் குழந்தை நேற்று பிறந்துள்ளது. இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள சாண்டி மாஸ்டர் எங்கள் ராஜா பிறந்துவிட்டார் என குறிப்பிட்டு, குழந்தையின் பிஞ்சு கையை பிடித்திருக்கும் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். இதனையடுத்து திரையுலகைச் சேர்ந்த பலரும் சாண்டி மாஸ்டருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SANDY (@iamsandy_off)