பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் புதிய திரைப்படம் ஆர்யா 30. இப்படத்தின் டைட்டில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வட சென்னையில் உள்ள இளைஞன் தனது பாக்ஸிங் கனவுகளை எப்படி நிஜமாக்கிக்கொள்கிறான் என்பதைப் பற்றிய கதையாக இப்படம் அமையவுள்ளது. இப்படத்துக்காகக் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, தனது உடற்கட்டை முற்றிலுமாக மாற்றியுள்ளார் ஆர்யா. 

ரஞ்சித் சார் நான் ரெடி என சில மாதங்களுக்கு முன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதையடுத்து இப்படத்திற்கான முதற்கட்ட வேலைகள் துவங்கப்பட்டது. இருப்பினும், கொரோனா தொற்று காரணமாக தொழில் நிறுத்தப்பட்டதால் படம் தாமதமானது. இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. ஆர்யா தனது பாத்திரத்திற்காக குத்துச்சண்டை திறன்களைப் பயின்று வந்தார். மேலும் மிகவும் சவாலான படம் என்று ஒருமுறை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளிப்படுத்தியிருந்தார். 

போத ஏறி, புத்தி மாறி எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான துஷாரா வடசென்னை பெண்ணாக ஆர்யாவுக்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. சமீபத்தில் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகர் கலையரசன், ஜான் கொக்கெனின் பயிற்சி வீடியோவை பகிர்ந்துள்ளார். அதன் பிறகு படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் நடிகர் ஷபீரின் ட்ரைனிங் வீடியோவை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார் ஆர்யா.

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் ஆர்யா. அதில் இயக்குனர் பா.ரஞ்சித்துடன் இணைந்து பாக்ஸிங் செய்தபடி போட்டோவை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்ற ருசிகர செய்தியை பதிவில் தெரிவித்துள்ளார். 

நடிகர் ஆர்யாவுக்கு கடந்த ஆண்டு வெளியான காப்பான் மற்றும் மகாமுனி திரைப்படங்கள் வெளியாகியது. இந்த இரண்டு படங்களிலும் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஆர்யா. தற்போது ஆர்யா நடிப்பில் உருவாகி ரிலீஸுக்கு ரெடியாக இருக்கும் படம் டெடி. ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ளார். இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.  யுவா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து அனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் விஷாலுடன் இணைந்து நடிக்கவுள்ளார். சமீபத்தில் நடிகை மிருணாளினி ரவி படத்தில் இணைந்துள்ளார். தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.