இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி திரைப்படத்தில் சிறிய நகைச்சுவை கதாபாத்திரத்தில்  நடிகராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ் தொடர்ந்து மான்கராத்தே மரகதநாணயம் போன்ற திரைப்படங்களில் நடிகராக  நடித்துள்ளார்.  ஆனால் அருண்ராஜா காமராஜ் அவை அனைவருக்கும்  அடையாளப் படுத்திக் காட்டியது அவரது பாடல்கள்தான் தனக்கே உரித்தான வித்தியாசமான தொனியில் அருண்ராஜா காமராஜ் பாடும் பாடல்களும் அவர் எழுதும் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ஜிகர்தண்டா திரைப்படத்தில் வரும் டிங்டாங் பாடல் அவரே எழுதி வித்தியாசமான குரலில் பாடியது ரசிகர்களின் கவனத்தை திருப்பியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி திரைப்படத்தில் "நெருப்புடா" என மிரட்டிய அருண்ராஜா காமராஜ் மக்கள் மனதில் இடம் பிடித்தார். 

தொடர்ந்து பல பாடல்களை எழுதியுள்ள அருண்ராஜா காமராஜ் குறிப்பாக அசுரன் திரைப்படத்தில் இடம் பெறக்கூடிய  "வா அசுரா வா அசுரா" பாடல் சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து தளபதியின் மாஸ்டர் திரைப்படத்திலும் "குட்டி ஸ்டோரி" பாடலை எழுதியிருந்தார். நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான அருண் ராஜா காமராஜ் நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவான "கனா" திரைப்படத்தின் மூலம் இயக்குனரானார்.  கனா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாலிவுட்டில் வெளியான ஆர்டிகல் 15 திரைப்படத்தை தற்போது இயக்கி வருகிறார். போனி கபூர் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கிறார். இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் ஊடகங்களால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதற்கிடையே அருண் ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்த சிந்துஜாவின் உடல்நிலை நேற்று மிகவும் மோசமானது. நேற்று இரவு தீவிர சிகிச்சையில் இருந்த சிந்துஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டது. இயக்குனர் பாடலாசிரியர் அருண் ராஜா காமராஜின் மிகப்பெரிய பலமாக இருந்தவர் சிந்துஜா. மனைவி சிந்துஜாவின் மறைவு  அருண்ராஜா காமராஜுக்கும் அவரது குடும்பத்துக்கும் பேரிழப்பு. தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அருண் ராஜா காமராஜின் மனைவி சிந்துஜாவின் மறைவுக்கு பல முன்னணி திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.