ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான படம் அந்தாதுன். 2018-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் 3 தேசிய விருதுகளையும் தட்டிச் சென்றது.

இந்தப் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தெலுங்கில் நிதின், தபு, நபா நடேஷ் உள்ளிட்டோர் நடிக்க மெர்லபாகா காந்தி இயக்கி வருகிறார். தமிழில் பிரசாந்த் நடிக்கிறார். தமிழில் அந்தகன் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தியாகராஜன் தயாரிக்கும் இந்தப் படத்தை பொன்மகள் வந்தாள் புகழ் இயக்குனர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் இயக்கவுள்ளார். தபு கதாபாத்திரத்தில் சிம்ரன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். 

இந்நிலையில் அந்தாதுன் படத்தின் மலையாள ரீமேக் இன்று பூஜையுடன் ஆரம்பமானது. முன்னணி ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கவுள்ள இந்தப் படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் ராஷி கண்ணா நடிக்கவுள்ளார்.

இதர கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. அனைத்தும் முடிவானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது.

ராஷி கண்ணா கைவசம் துக்ளக் தர்பார் படம் உள்ளது. அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வருகிறது. இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. விஜய் சேதுபதியின் நடிப்பை பார்த்த ரசிகர்களோ, செம ட்ரீட் இருக்கு என்ற ஆவலில் உள்ளனர். இதனைத்தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் உருவான அரண்மனை 3 படத்திலும்  ஆர்யா ஜோடியாக நடித்துள்ளார். 

பிரித்விராஜ் நடிப்பில் ஆடுஜீவிதம் மற்றும் ஜனகனமன ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திலும் பிரித்விராஜ் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.