மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ரம்மி மற்றும் பண்ணையாரும் பத்மினியும் படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பிரபலம் அடைந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு தென்னிந்திய மொழிகளில்  கதாநாயகியாகவும் பல முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த காக்கா முட்டை, இயக்குனர் சீனு ராமசாமியின் தர்மதுரை, இயக்குனர் வெற்றிமாறனின் வட சென்னை உள்ளிட்ட படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளியானது.

பிரபல ரேடியோ ஜாக்கியும் நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஏண்டா தலையில எண்ண வைக்கல. அதைத் தொடர்ந்து தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்திருக்கும் திட்டம் இரண்டு திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியிருக்கிறார்.

சிக்ஸர் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ் கண்ணன் மற்றும் மினி ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் வினோத்குமார் இணைந்து தயாரித்திருக்கும் திட்டம் இரண்டு படத்திற்கு இசையமைப்பாளர் கோகுல் பினாய் இசையமைக்க ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

காவல்துறை அதிகாரியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் திட்டம் இரண்டு திரைப்படம் நேரடியாக சோனி லைவ் OTT தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இத்திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வெளிவரும் டிரெய்லரில் திட்டம் இரண்டு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.