தலை சிறந்த விளையாட்டு நட்சத்திரங்களின் வாழ்க்கையை மையமாக வைத்து பல திரைப் படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் மேரி கோம், மில்கா சிங், தோனி உள்ளிட்டோர் வாழ்க்கையை வைத்து எடுக்கப்பட்ட படங்கள் மாபெரும் வசூல் சாதனை பெற்றது. இதைத் தொடர்ந்து பிரபல கிரிக்கெட் வீரர் கபில் தேவ், பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து, சாய்னா, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மகேஸ்வரி உள்ளிட்ட பல வீராங்கனைகளின் வாழ்க்கை படங்கள் தயாராகி வருகிறது.

அந்த வரிசையில் தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனையான சாந்தி சவுந்தரராஜன் வாழ்க்கை கதையும் திரைப்படமாக உள்ளது. இவர் இந்தியாவிற்கு 12 சர்வதேச பதக்கங்களையும் தமிழகத்திற்கு 50க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் வென்று கொடுத்துள்ளார். இது மட்டுமின்றி ஆசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ் பெண் இவரே ஆவார்.

ஆனால் ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடத்தப்பட்ட பாலின சோதனையில் இவர் தோல்வியுற்றதால், பெண்களுக்கான போட்டியில் பங்கேற்க இவர் தகுதி பெறவில்லை. இதனால் அவரிடம் இருந்த வெண்கலம் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது. அதுமட்டுமின்றி தடகளப் போட்டிகளில் இருந்தும் அவர் வெளியேற்றப்பட்டார்.

ஆகையால் இவரது வாழ்க்கையில் நடந்த பல திருப்பங்கள் நிறைந்த சம்பவங்கள் திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது. இப்படத்தை இயக்குனர் ஜெயசீலன் தவப்புதல்வி தயாரிக்க உள்ளார். இப்படத்தில் சாந்தி சௌந்தரராஜனின் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை நடிக்க உள்ளார். மேலும் ஜிப்ரான் இசையமைக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு சாந்தி சவுந்தரராஜன் இன் கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சாந்தி சவுந்தரராஜன் ரோலில் நடிக்கவிருப்பதாக வதந்திகள் கிளம்பியது. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷின் செய்தி தொடர்பாளர் அவர் நடிக்கவில்லை என்ற செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.