நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் லாக்டவுன் நீக்கப்பட்டாலும், இந்த வைரஸ் காரணமாக உலக நாடுகள் பீதியில் உள்ளன. இந்த உயிர்கொள்ளி வைரஸ் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு சரியான சிகிச்சை உள்ளதா ? இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதா என்று சரியான விவரம் தெரியாமல் உலக நாடுகளே திக்குமுக்காடி வருகின்றனர். 

இந்த வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக், விஷால் உள்பட பலருக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்குப் பின் உடல் நலம் தேறினர். இந்த வைரஸ் காரணமாக சினிமா பிரபலங்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். 2020-ம் ஆண்டு துவங்கிய நேரத்திலிருந்தே திரைப்பிரபலங்கள் பலரின் இறப்பு செய்தியை கேட்டு வருகிறோம் என்று ரசிகர்கள் குமுறி வருகின்றனர். 

இந்நிலையில் தமிழ் நடிகர் புளோரன்ட் பெரேராவும் கொரோனா வைரஸுக்கு உயிரிழந்துள்ளார். இவர் விண், விஜய் மற்றும் கலைஞர் டிவிகளில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். புதிய கீதை படத்தில் நடிகராக அறிமுகமான இவர், பிரபு சாலமன் இயக்கிய கயல் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.

தொடர்ந்து தனுஷின் தொடரி, வேலையில்லா பட்டதாரி 2, ராமின் தரமணி, தர்மதுரை, எங்கிட்ட மோதாதே உள்பட சில படங்களில் நடித்துள்ளார். சென்னை தி.நகரில் வசித்து வந்த இவர், குள்ளநரிகூட்டம் பாலாஜி இயக்கும் படத்தில் நடிக்க இருந்தார். இதன் ஷூட்டிங் திண்டுக்கல்லில் நடிந்து வருகிறது. இதன் ஷூட்டிங்கிற்கு கடந்த 10 நாட்களுக்கு முன் செல்ல இருந்த நிலையில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன், அவர் உடல்நிலை திடீரென மோசமானது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். மறைந்த பெரேராவுக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். பெரேராவின் மறைவை அடுத்து திரையுலகினர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.