விசாரணைக்கு அழைத்து போலீஸ் துன்புறுத்துவதாக தீ குளித்த பெண் பலி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காந்தி நகரைச் சேர்ந்த பாண்டி என்கிற ராஜேந்திரன், திருட்டு வழக்கு ஒன்றில் ஏற்கனவே சிறையில் இருந்துள்ளார். இவரது மனைவி செல்வி, வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்வி, தன்னுடைய கணவரிடமிருந்து திருட்டை நகை ஒன்றை வாங்கி விற்றதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அறந்தாங்கி போலீசார் செல்வியை விசாரணைக்காகக் காவல் நிலையம் அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது, விசாரணை என்ற பெயரில் அழைத்து, போலீசார் துன்புறுத்துவதாகக் கூறி அறந்தாங்கி காவல் நிலையம் முன்பே, செல்வி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு, காவல் நிலையம் உள்ளே செல்ல முற்பட்டுள்ளார். 

இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த காவல் நிலையம் உள்ளே இருந்த போலீசார், ஓடி வந்து தீயை அணைத்து, செல்வியை அருகில் உள்ள அரசு 

மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்க செல்விக்கு தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உடல் முழுவதும் சுமார் 60 சதவீதம் அளவுக்கு தீ காயம் இருந்ததால், புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் செல்விக்கு தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஏற்கனவே, தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் லாக்கப் டெத் ஆனதால், தந்தையும், மகனும் உயிரிழந்த விவகாரத்தில், காவல் நிலையத்தில் இருவருக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் கொடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி, இந்தியா முழுவதும் மிக பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. 

இந்த நிலையில், அறந்தாங்கியில் விசாரணைக்கு அழைத்துத் துன்புறுத்துவதாகக் கூறி, அறந்தாங்கி காவல் நிலையம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்ட பெண், இன்று சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அதேபோல், தென்காசியில் காவல் துறையினர் தாக்கியதால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுவாரின் மரணம் தொடர்பாக, மறு விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டம பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த அருண்குமார், கடந்த 21 ஆம் தேதி தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

காவல் நிலையத்தில் அருண்குமாரை போலீசார் கடுமையாகத் தாக்கியதாகத் தெரிகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அருண்குமார், தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக அருண்குமாரின் மனைவி, உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், காவல் துறையினர் தாக்கியதால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் அருண் குமாரின் மரணம் தொடர்பாக, மறு விசாரணை நடத்த அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 

அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் பகுதியில் ஊடரங்கு உத்தரவை மீறி குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டி கடை திறந்து வைத்திருந்ததாகக் கூறி, போலீசார் ஒருவர் கடையில் உள்ள எலக்ட்ரானிக் எடை இயந்திரத்தைத் தூக்கி சாலையில் வீசிய சம்பவம், மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போலீஸ் ரகுராமனின் இந்த செயல்பாடுகள், அந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது, அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து, விதிமுறைகளை மீறி கடையைத் திறந்து வைத்ததாகக் கூறி, எடை இயந்திரத்தைத் தூக்கி வீசிய போலீஸ் ரகுராமன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.