தூத்துக்குடியில் மகனுடன் தனியாக வசித்து வந்த பெண்ணை 2 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்படி பகுதியைச் சேர்ந்த கணேசன், அவர் மனைவி 47 வயதான செங்கமலம் தம்பதிகள் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் மகனும் உள்ளனர்.  

இதனிடையே, செங்கமலத்தின் கணவன் கணேசன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்து விட்ட நிலையில், மனைவி செங்கமலம் மன ரீதியாகவே சற்று பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதன் காரணமாக, தன்னுடைய 2 பெண் குழந்தைகளையும் தன்னுடைய உறவினர் வீட்டில் தங்க வைத்துப் படிக்க வைத்து வந்த அவர், 9 வயதான மகன் கோமதி சங்கருடன் அதே வீட்டில் வசித்து வந்தார்.

அப்போது, சற்று மன நிலை பாதிக்கப்பட்ட பெண், தன் மகனுடன் தனியாக வசித்து வருவதை அந்த பகுதியில் உள்ள சிலர் நோட்டமிட்டதாகத் தெரிகிறது. 

குறிப்பாக, அந்த பகுதியில் உள்ள சம்படி பகுதியைச் சேர்ந்த 34 வயதான ஆனந்த், அவரது கூட்டாளியான அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதான சந்தன மகாராஜா ஆகிய இருவரும், மகனுடன் தனியாக வசித்து வந்த செங்கமலத்தை நோட்டம் இட்டுக்கொண்டே வந்தனர்.

இதனையடுத்து, கடந்த 10 ஆம் தேதி அன்று, செங்கமலத்தை ஆனந்த் மற்றும் சந்தன மகாராஜா ஆகிய இருவரும் சேர்ந்து கட்டாயப்படுத்தியும், தாக்கியும் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். அப்போது, அவர்கள் இருவரிடமிருந்து செங்கமலம் போராடி மீளப் பார்த்து உள்ளார். ஆனால், அவர்கள் இருவரும் அங்குக் கிடந்த செங்கல்லால் தலை, முகம், நெற்றி என்று பல்வேறு பகுதிகளில் கொடூரமாகத் தாக்கி உள்ளனர். இதில், அந்த பெண்ணுக்கு ரத்தம் வந்த நிலையில், அவர் அங்கேயே மயங்கி உள்ளார். இதனையடுத்து, காம வெறிபிடித்த மிருகங்கள் இரண்டும், அந்த பெண்ணை வெறித்தீர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

பாலியல் ஆசைகள் எல்லாம் தீர்ந்த பிறகு, மயங்கிய நிலையில் கிடந்த செங்கமலத்தைப் பார்த்து இருவரும் தங்களுக்குள்ளே விவாதித்து உள்ளனர்.

அப்போது, மயங்கி கிடக்கும் செங்கமலம் நினைவு திரும்பினால், தங்களை நிச்சயம் காட்டிக் கொடுத்து விடுவார் என்று சந்தேகப்பட்ட அவர்கள் இருவரும், அந்த பெண்ணை கொடூரமாகக் கொலை செய்து உள்ளனர். அதன் பிறகு, அவரின் உடலை அந்த பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் வீசி விட்டுச் சென்று விட்டனர்.

மேலும், அன்று இரவே மகாராஜா சென்னைக்கு சென்றுவிட்டான். உள்ளூரில் இருந்த ஆனந்த் சம்படியிலேயே தலைமறைவாக இருந்து வந்தார். 

இந்த நேரத்தில் தனது தாயாரை காணவில்லை என்று, அவரது 9 வயது மகன் கோமதி சங்கர் அந்த பகுதி முழுவதும் தேடி உள்ளான். ஆனால், எங்குத் தேடியும் தாய் கிடைக்காத நிலையில், தன் உறவினர் வீட்டில் இருக்கும் தனது சகோதரிக்குத் தகவல் தெரிவித்து உள்ளான். 
 
இதனையடுத்து, கடந்த 12 ஆம் தேதி காலை சம்படியில் உள்ள காட்டுப்பகுதியில் செங்கமலத்தின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து விரைந்து வந்த போலீசார், அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த ஏரல் போலீசார், விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சம்படி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் மற்றும் சந்தன மகாராஜா ஆகிய இருவரும் செங்கமலத்தை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரிய வந்தது.

அத்துடன், சென்னை சென்றிருந்த மகாராஜா 12 ஆம் தேதி காலையில் சென்னையிலிருந்து சம்படிக்கு ஊர் திரும்பி உள்ளார். அந்த நேரத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட பொருட்களை வைத்தும், கிடைத்த சாட்சிகளை வைத்தும் மகாராஜா மற்றும் ஆனந்த் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, அவர்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.