மதுரையில் நடத்தையில் சந்தேகம் அடைந்து 18 வயது மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து கணவன் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்து உள்ள வீ.அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த தவிடன் - முத்து லட்சுமி தம்பதியின் 3 வது மகள் ஜெயசக்தி பாலாவுக்கும், விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அடுத்து உள்ள மத்திய சேனை கிராமத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டியன் மகன் முத்துப்பாண்டிக்கம் கடந்த வருடம் நவம்பர் மாதம் முறைப்படி திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்குப் பிறகு, கணவன் - மனைவி இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், முத்துப்பாண்டி ஏற்கனவே அதே பகுதியைச் சேர்ந்த 10 வகுப்பு மாணவியைக் காதலித்து, அந்த மாணவியுடன் நெருங்கிப் பழகி வந்தார்.

இந்நிலையில், பெற்றோரின் வற்புறுத்தலின் பெயரில், வேறு வழியின்றி முத்துப்பாண்டி, ஜெயசக்தி பாலாவை திருமணம் செய்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆனால், திருமணத்திற்குப் பின்னரும், முத்துப்பாண்டி அந்த 10 ஆம் வகுப்பு மாணவி உடனான காதலை கை விடாமல் தொடர்ந்து நெருங்கிப் பழகி வந்துள்ளார். இந்த விசயம் மனைவி ஜெயசக்தி பாலாவுக்கு தெரிய வந்தது. இதன் காரணமாக, கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.இதனால், ஆத்திரமடைந்த முத்துப்பாண்டி தன்னுடைய காதலி 10 ஆம் வகுப்பு மாணவியை தன் வீட்டிற்கே அழைத்து வந்துள்ளான்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த ஜெயசக்தி பாலா, அங்குள்ள ஆமத்தூர் காவல் நிலையத்தில் கணவன் மீது புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் முத்துப்பாண்டி மற்றும் ஜெயசக்தி பாலாவை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது தான், ஜெயசக்தி பாலாவிற்கு 18 வயது கூட ஆகாத நிலையில், அவருக்கு திருமணம் நடைபெற்றது போலீசாருக்குத் தெரிய வந்தது. இதனால், ஜெயசக்தி பாலாவிற்கு 18 வயது பூர்த்தியாகும் வரை கணவன்- மனைவி இருவரும் பிரிந்து வாழ வேண்டும் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, ஜெயசக்தி பாலா அவரது அம்மா வீட்டிற்குச் சென்று விட்டார். முத்துப்பாண்டி எப்போதும் போல் தன்னுடைய வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவி ஜெயசக்தி பாலாவின் சொந்த ஊரில் நடைபெற்ற ஒரு விசேஷ நிகழ்ச்சியில் முத்துப்பாண்டி கலந்துகொள்ள வந்திருந்தார். அப்போது, முத்துப்பாண்டி காதுபடவே, அதே கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஜெயசக்தி பாலாவைப் பற்றி தவறாகப் பேசி கிண்டல் செய்ததாகத் தெரிகிறது. இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த முத்துப்பாண்டி மனைவி மீது சந்தேகப்பட ஆரம்பித்தான்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஜெயசக்தி பாலாவிற்கு 18 வயது பூர்த்தியானதால், இருவீட்டார் உறவினர்களும் பேசி கடந்த 13 ஆம் தேதி கணவன் - மனைவி இருவரையும் சேர்த்து வைப்பதாக முடிவு செய்திருந்தனர். ஆனால், அதற்கு முதல் நாள் இரவே 12 ஆம் தேதியே, தன் மனைவியே வெளியே தனியாக வரவைத்துள்ளான் முத்துப்பாண்டி.

அப்போது, ஜெயசக்தி பாலாவும் கணவன் தானே அழைக்கிறார் என்று நம்பி அந்த பகுதியில் உள்ள கண்மாய் பக்கம் வந்திருக்கிறார். அங்கு ஏற்கனவே பதுங்கி இருந்த கணவன் முத்துப்பாண்டியின் 2 நண்பர்களும் பாய்ந்து வந்து ஜெயசக்தி பாலாவை கத்தியால் குத்த, அதன் பிறகு, மறைந்து இருந்த முத்துப்பாண்டியும் ஓடி வந்து மனைவி ஜெயசக்தி பாலாவை சராமாறியக குத்தி கொடூரமாகக் கொலை செய்து உள்ளனர். 

இதில், 13 இடங்களில் கத்தி குத்து காயம் ஏற்பட்டு, ஜெயசக்தி பாலா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த நிலையில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

அந்த நேரம் பார்த்து வெளியே சென்ற மகளைக் காணவில்லை என்று, அவரது பெற்றோர்கள் தேடி வந்துள்ளனர். ஆனால், மகள் கிடைக்கவில்லை. மறுநாள் காலையில் அந்த பகுதி மக்கள் இங்கு உள்ள கண்மாயில் இளம் பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசாருககு தகவல் தெரிவித்து உள்ளனர். இது குறித்து விரைந்து வந்த போலீசார், கண்மாயில் கிடந்த உடலைப் பார்த்து உள்ளனர். அப்போது, ஜெயசக்தி பாலாவின் ஆடைகள் அனைத்தும் கிழிக்கப்பட்ட நிலையில், 13 இடங்களில் கத்தியால் குத்துப்பாட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. 

மேலும், ஜெயசக்தி பாலாவின் சடலம் அருகே அவர் போனில் பேசிக்கொண்டு வந்ததற்குத் தடயமாக, அவர் போனின் ஹெட்போன் மட்டும் கிடந்து உள்ளது. ஆனால், போன் கிடைக்கவில்லை. இதனால், அவருக்குக் கடைசியாக போன் செய்த நம்பரை வைத்து போலீசார் விசாரித்த போது, கணவன் முத்துப்பாண்டி சிக்கினான். அவனைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், மனைவியை தன் இரு நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டான். அத்துடன், கொலைக்குப் பயன்படுத்திய 3 கத்திகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதே நேரத்தில், முத்துப்பாண்டிக்கு உதவிய, அவனுடைய நண்பர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இந்த 3 பேர் மீதும் ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து, அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.