“தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் எதுவுமின்றி ஊரடங்கு மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் 2 அலையாக பரவத் தொடங்கியது முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. இதனால், கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது படிப்படியாக குறைந்து காணப்பட்டது. தற்போது, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. 

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கிய நிலையில், தமிழகத்தில் படிப்படியாக தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் தற்போது அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. 

அதே போல், தமிழகத்திலும் 3 சென்னை, கோவை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.

இந்த நிலையில் தான், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதால் இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் எதுவுமின்றி ஊரடங்கு மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக” அறிவித்து உள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள உத்தரவில், “கூடுதலாக எவ்வித தளர்வுகளுமின்றி 31-7-2021 முதல் 9-8-2021 காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக” அறிவித்து உள்ளார். 

“தமிழகத்தில், கடந்த சில வாரங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நகரங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் பொது மக்கள் அதிகம் கூடுவதும், அதனால் நோய்த் தொற்று பரவல் அபாயம் ஏற்பட்டு வருவதும் விவாதிக்கப்பட்டதாகவும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் சரியான முறையில் பின்பற்றப்படாவிட்டால் அதன் விளைவுகள் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும்” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இதனால், “கொரோனா தொற்றுத் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

“அதிக அளவு கூட்டம் கூடும் பகுதிகளை மூடுவது குறித்தும் மாவட்ட நிர்வாகம் ஆலோசனை செய்து முடிவு எடுக்கலாம்” என்றும், அவர் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், “வர்த்தக நிறுவனங்கள், கடைகள், பொது மக்கள் கூடும் இடங்களில் கைசுத்திகரிப்பான்களை பயன்படுத்த வேண்டும் என்றும், உடல் வெப்பநிலை கண்காணிக்கப்பட வேண்டும் என்றும், கடைகளில் பணிபுரிபவர்கள், வாடிக்கையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்றும், முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

“இப்படியாக, விதிமுறைகளைப் பின்பற்றாமலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதித்தும் செயல்படும் வணிக மற்றும் இதர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், தனது அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

முக்கியமாக, “மூன்றாம் அலை என்ற ஒன்று தமிழ்நாட்டில் ஏற்படவே முடியாத வகையில், நாம் ஒவ்வொருவரும் விழிப்புடன் இருக்கவேண்டும் என்றும், வருமுன் காத்தலே விவேகம்” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார். 

“இது நாம் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் என்றும், மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டு என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டு உள்ளார்.