திருப்பத்தூர் அருகே 12 வகுப்பு மாணவியுடன் 2 குழந்தைகளின் தந்தை ஓடிப்போனதால், அதிர்ச்சியடைந்த மனைவி, கணவனை மீட்டுத்தரக்கோரிக் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். 

“அறியாத வயது, புரியாத மனசு.. ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்” என்ற வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. அரியாத வயதில், புரியாமல் செய்யும் தவறுக்காக, சம்மந்தப்பட்ட ஒருவர் மட்டும் தண்டிக்கப்பட்டால் அல்லது பாதிக்கப்பட்டால் கவலை இல்லை. ஆனால், இப்படி நடைபெறும் தவறுகளால், அவரை சார்ந்து உள்ள ஒட்டு மொத்த குடும்பமுமே பாதிக்கப்பட்டுச் சிதைந்து போவது தான், இந்த சமூகத்தில் பெரும் அவலமாகவே இருக்கிறது. இது போன்ற சம்பங்கள் ஒன்று இரண்டு நடந்தால், பரவாயில்லை. ஆனால், இது போன்ற சம்பவங்கள் தொடர் கதையாக நடப்பது தான் வேதனையாக இருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தை அடுத்த செல்லரபட்டி கோபாலகிருஷ்ணன் வட்டம் பகுதியைச் சேர்ந்த 35 வயதான கதிரவன் என்கிற குரு, அந்த பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலைப் பார்த்து வருகிறார். இவருக்கு 32 வயதான வெள்ளிமணி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தனக்கு ஒரு மனைவி இருக்கிறார், இரு குழந்தைகள் இருக்கிறார்கள் என்ற பொறுப்புடைமை மறந்து செயல்பட்டு இருக்கிறார் கதிரவன் என்கிற குரு.

அதாவது, அதே பகுதியைச் சேர்ந்த முனிராஜ் என்பவரின் மகள் 17 வயதான கோமதி, அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

அந்த மாணவியை மயக்கி தன் காதல் வலையில் வீழ்த்திய குரு, அந்த பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே அந்த மாணவியைக் கடத்திச் சென்று உள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவர் மனைவி, அங்குள்ள கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில், “எனது கணவன் குரு வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடி விட்டார். இதனால், என் கணவனை மீட்டு என்னிடம் தாருங்கள். நான் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் மிகவும் தவித்து வருகிறேன். என் வாழ்க்கைக்கு வழி தேடிக் கொடுங்கள்” என்று, அவர் குறிப்பிட்டு உள்ளார். 

இந்த புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட போலீசார், “உடனடியாக உங்கள் கணவரை மீட்டுத் தருகிறோம்” என்று, ஆறுதல் கூறி, அந்த பெண்ணை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த வாரம் கூட புதுக்கோட்டையில் 2 பிள்ளைகளின் தந்தை, பள்ளியில் வடித்து வந்த மாணவியுடன் வீட்டை விட்டு ஓடிப்போன சம்பவத்தால், அவமானம்  அடைந்த அவர் மனைவி தன் இரு குழந்தைகளுக்கும் தீ வைத்து, தானும் தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.