இளம் பெண் காதலை கைவிட்டதால் ஆத்திரம் அடைந்த காதலன், ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த கொலை செய்ய முயன்ற சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. 

தஞ்சை மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. 

தஞ்சை அருகில் உள்ள நடுக்காவேரி அரசமரத்து தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் 24 வயான அஜித், தஞ்சாவூரில் கார் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். 

அதே நேரத்தில், இளைஞர் அஜித், தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் ஒரு கல்லூரியில் படித்து வந்த 19 வயது இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். பதிக்கு, அந்த இளம் பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இப்படியாக இவர்களது காதல் சென்றுகொண்டிருந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் இறுதி வாரத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. இதனால், அந்த மாணவி வெளியூரில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த சல தினங்களுக்கு முன்பு கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் மீண்டும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், அந்த இளம் பெண் வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு வந்து, கல்லூரிக்கு சென்று வந்தார். 

அதன் படி, நேற்று காலை வழக்கம் போல் சொந்த ஊரில் இருந்து அந்த இளம் பெண் கல்லூரிக்கு வருவதற்காக பேருந்தில் தஞ்சாவூருக்கு வருகை தந்தார்.

அதன் பிறகு, தஞ்சை புதிய பேருந்து நிலையம் நோக்கி அரசு பேருந்தில் அந்த பெண் ஏறி உள்ளார். அந்த பேருந்தில், அந்த இளம் பெண்ணின் காதலன் அஜித்தும் பயணம் செய்தார். மாணவி அமர்ந்து இருந்த இருக்கையின் பின்புறத்தில் வந்து அமர்ந்து அந்த இளைஞர், அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது, அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, “என்னை நீ மீண்டும் காதலிக்க வேண்டும்” என்று, அந்த இளைஞர் இளம் பெண்ணிடம் வற்புறுத்தியதாகத் தெரிகிறது. ஆனால், அதனை ஏற்க அந்த இளம் பெண் மறுத்துவிட்டு, “என்னிடம் இனி நீ பழக வேண்டாம்” என்று, கோபத்தோடு கூறியுள்ளார். இதனால், கடும் ஆத்திரம் அடைந்த காதலன் அஜித், தான் மறைத்து வைத்திருந்த பேனா போன்ற சிறுய அளவிலான கத்தியை எடுத்து “எனக்கு கிடைக்காத நீ, வேற யாருக்கும் கிடைக்கக்கூடாது” என்று, ஆவேசமாக கூறிக்கொண்டே, அந்த மாணவியின் கழுத்தை அறுத்துள்ளார். 

இதில், அந்த மாணவிக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் அங்கேயே அந்த மாணவி மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்த பேருந்தில் இருந்த சக பயணிகளும் அலறி அடித்துக்கொண்டு, இங்கும் அங்குமாக ஓடினார்கள். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு, பேருந்தை டிரைவர் நிறுத்தியுள்ளார். 

இதனால், பேருந்தில் இருந்து காதலன் அஜித் கீழே இறங்கித் தப்பி உள்ளான். ஆனால், அவனை பிடிக்கும் படி சக பயணிகளும் சத்தம் போட்டதால், அக்கம் பக்கத்தினர் விரட்டிச் சென்று, அவனை சுற்றி வளைத்துப் பிடித்தனர். இது தொடர்பான தகவல் போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அங்கு விரைந்து வந்த போலீசார், படுகாயம் அடைந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், பிடிபட்ட அஜித்தை தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், இந்த காதல் விசயம் தெரிய வந்தது. 

இதன் காரணமாக, கொலை செய்ய முயன்றதாக அஜித் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, அஜித்தை தஞ்சை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருவிடைமருதூர் கிளை சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டது.