கடந்த சில வருடங்களாகவே மத்திய அரசு தொடர்ந்து  பல்வேறு காலக்கட்டத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. பழைய 500, 1000 ரூபாய் மதிப்பிழக்கம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து இதுபோல் இன்னும் பல சீர்திருத்தங்கள் கொண்டு வந்ததை அடுத்து இப்பொழுது மத்தியில் ஆளும் பா.ஜ.க வின் பார்வை புதியதாக கல்வியின் பக்கம் திரும்பியுள்ளது.

மத்திய அரசு அமைத்த கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவினர் 2019ஆம் ஆண்டு ஜூன் 1ம் தேதி புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டனர். புதிய கல்விக் கொள்கை வரைவில் இடம்பெற்ற மும்மொழிக் கல்வி, குருகுல கல்வி முறை, NTA எனப்படும் நுழைத்தேர்விற்கான அமைப்பு, 3 வயது முதலே கல்வியை தொடங்குதல், சமஸ்கிருத மொழிக்கு முக்கியத்துவம் உள்ளிட்ட அம்சங்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின.

தமிழகத்தில் தி.மு.க உள்ளிட்ட கட்சிகளும், கல்வியாளர்களும் புதிய கல்விக் கொள்கைக்கு மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். கல்வியாளர்கள் வைத்த சில கோரிக்கைகளை மட்டும் ஏற்றுக்கொண்டு மத்திய அரசு சில திருத்தங்களை செய்தது. இருப்பினும் புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
 
எதிர்ப்புகள் பல இருந்தபோதிலும், புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், புதிய கல்வி வரைவு கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஒப்புதலுக்கு பிறகு, இம்மாத தொடக்கத்தில், பிரதமர் மோடி இதுபற்றி காணொலி வாயிலாக மக்களிடம் உரையாற்ற்னார். அப்போது, ``இந்தியாவில் 34 ஆண்டுகால பழமையான கல்வி முறையை மாற்றியமைக்கும் தேசிய கல்வி கொள்கை எந்த ஒரு பகுதியிலும் சார்பு குறித்த கவலைகளை எழுப்பவில்லை, என்பது "மனதைக் கவரும்" விஷயமாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

மேற்கொண்டு, பள்ளி கல்வியை தொடர்ந்து உயர் நிலை கல்வியில் சட்டம் மற்றும் மருத்துவம் தவிர நாடு முழுவதும் மற்ற பாடப்பிரிவுகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டங்களும் கொண்டு வர உள்ளனர். இளநிலை கல்வி ஆண்டுகள் 3 அல்லது 4 ஆண்டுகள் வரையும் முதுக்கலை பிரிவில்   1 அல்லது 2 ஆண்டுகள் வரையும் மாற்றப்பட இருக்கிறது. இதனை தொடர்ந்து  M.pil  முற்றிலுமாக நீக்கப்பட்டது. பள்ளி கல்வி முடித்து வெளிவரும் 12 ம் வகுப்பு மாணவர்கள் கல்லூரிக்குள் நுழைய அனைத்து கல்லூரிகளிலும் நுழைவு தேர்வுகள். இந்த நுழைவுத்தேர்வுகள் கட்டாயமில்லை என்றாலும் மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய கல்வி கொள்கை 2020 அறிக்கை வெளியிட்ட பின் நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பினாலும் தமிழக அளவில் பல அரசியல் தலைவர்கள்,கல்வியாளர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து புதிய கல்வி கொள்கையை எதிர்த்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தி கொண்டு தான் இருக்கிறார்கள். ``நாடே இந்த கொரோனா என்னும் கொடிய நோயிடம் சிக்கி தவிக்கும் நிலையில் நமக்கு வேண்டாத கொரோனா உடன் புதிய கல்வி கொள்கை என்னும் பெயரில் கல்வியையும் இந்த இக்கட்டான காலத்தில் நம் மீது வலுக்கட்டாயமாக திணிக்கிறது" என்ற விமர்சனம் மேலோங்கியது. 

தமிழகத்தை பொறுத்தவரை, மாநில அரசும் சில விஷயங்களில் முரண்பட்டுதான் இருக்கிறது. அதன் வெளிப்பாடகவே தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்த முதல்வர், புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய குழு அமைக்கப்படும் என்றும் அந்த குழுவின் ஆலோசனை படியே புதிய கல்விக் கொள்கை குறித்து அரசு பரிசீலிக்கும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கை பற்றி ஆராய தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில் 7 பேர் அடங்கிய குழுவை அமைத்து தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது.
 
அந்த குழுவில் சென்னை பல்கலை. முன்னாள் துணை வேந்தர்கள் தியாகராஜன், துரைசாமி ஆகியோரும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணை வேந்தர் பிச்சுமணியும், அழகப்பா துணைவேந்தர் ராஜேந்திரன், திருவள்ளூர் துணைவேந்தர் தாமரைச்செல்வி, காமராஜர் பல்கலை. கிருஷ்ணன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.