“ஹிந்திக்காரர்களுக்கு மட்டும் தமிழகத்தில் இபாஸ் தேவையில்லையா? என்று, தமிழ்த்தேசியப் பேரியக்கம் கேள்வி எழுப்பி உள்ளது.

இது தொடர்பாக தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.அருணபாரதி எழுப்பி உள்ள கேள்வியில், “திருச்சி பொன்மலையில் இந்திய அரசின் தென்னக ரயில் நிலையத்தின் கீழ் இயங்கும் ரயில்வே பணிமனை (Golden Rock Central Railway Workshop - GOW) செயல்பட்டு வருவதாக” குறிப்பிட்டுள்ளார். இதில், சுமார் 6 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். அங்கு, கடந்த 3 ஆம் தேதி காலை, பொன்மலை பணிமனை நிர்வாகத்தின் திருமண மண்டபத்தில் திடீரென நூற்றுக்கணக்கான வட மாநிலத்தவர்கள் தங்கள் கைகளில் சான்றிதழ்களோடு, எவ்வித தனிமனித இடைவெளியும் இன்றி நின்றிருந்தனர்” என்றும் சுட்டிக்காட்டி உள்ளார்.

“அவர்கள், எதற்காக நிற்கின்றனர் என்று விசாரித்த போது அதிர்ச்சியாக இருந்தது” என்று குறிப்பிட்டுள்ள அவர், “பொன்மலை பணிமனையில் உள்ள எலக்ட்ரீசியன் உள்ளிட்ட கிரேட் 3 பணியிடங்களுக்கு அந்த வட மாநிலத்தவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள் என்றும், அதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்காக அவர்கள் அனைவரும் வந்திருப்பதாகச் சொன்னார்கள்” என்றும் கூறியுள்ளார். 

“மொத்தம், 588 பேர் வேலைக்கு எடுக்கப்பட்டனர் என்றும், அதில் வெறும் 12 பேர் தான் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்” என்று சுட்டிக்காட்டிய க.அருணபாரதி, “மற்ற அனைவரும் உ.பி., பீகார்., ம.பி. போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்த இந்திக்காரர்கள்” என்றும் தெரிவித்துள்ளார். “அதிலும் சிலர் கேரளத்திலிருந்தும், ஆந்திரத்திலிருந்தும் வந்திருந்தார்கள்” என்றும் அவர் கூறி உள்ளார். 

“கொரோனா நோய்ப் பரவலைத் தடுக்கும் பொருட்டு, தமிழ்நாடு எங்கும் பொது முடக்கம் செயலில் உள்ள நிலையில், தங்கள் வாழ்வாதாரத் தேவைக்காகவும், சுக துக்க நிகழ்வுகளில் பங்கெடுக்கவும் தமிழ் மக்கள் இபாஸ் வாங்க முடியாமல் அல்லல்பட்டுக் கொண்டுள்ளனர். உரிய ஆவணங்கள் இணைத்திருந்தாலும் கூட இபாஸ் கிடைப்பதில்லை. ஆனால், பல்லாயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து வந்த இந்த வட மாநிலத்தவர்களுக்கு எப்படி இபாஸ் கிடைத்தது என்ற மர்மம் இன்னும் நீடிக்கிறது” என்றும், அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

குறிப்பாக, “பலருக்கு இபாஸ் என்றால் என்னவென்றே தெரியவில்லை” என்றும், க.அருணபாரதி பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார்.

“கொரோனா முடக்கத்தால், தங்கள் வேலைகளை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து தமிழ் மக்கள், தங்கள் சொந்த மண்ணிலேயே கடும் நெருக்கடிக்குள்ளாகித்  தவித்து வரும் நிலையில், இப்படி அயலாருக்குத் தமிழ் மண்ணில் வேலை போட்டுக் கொடுப்பது ஞாயம் தானா?” என்றும், க.அருணபாரதி நேரடியாகவே கேள்வி எழுப்பி உள்ளார். 

“எப்படியாவது, தமிழ்நாட்டிற்குள் இந்திக்காரர்களைத் திணித்து, தமிழர்களை சிறுபான்மையினர் ஆக்கிவிட்டு, பா.ஜ.க. போன்ற இந்திக் கட்சிகளைத் தமிழ் நாட்டிற்குள் வளர்த்துவிட வேண்டு என்று துடிக்கும் பா.ஜ.க. இந்திய அரசின் இன்னொரு சதித்திட்டமா இது? என்று, ஐயம் கொள்ள வேண்டியுள்ளது” என்றும், தன்னுடைய அச்சத்தை வெளிப்படுத்தி உள்ளார். 

இந்தியாவிலேயே அதிகமான பொறியியல் கல்லூரிகளைக் கொண்ட மாநிலம் தமிழ் நாடு தான். அதிகமான பொறியியல் பட்டதாரிகளும் இங்கு தான் உள்ளனர். இந்தியாவிலேயே அதிகளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகள், தொழிற் பயிற்சிக் கல்லூரிகள் உள்ள மாநிலமும் தமிழ்நாடு தான். ஆனால், அப்படிப்பட்ட தமிழ் நாட்டில் சாதாரண எலக்ட்ரீசியன் பணியிடங்களுக்குக் கூட தமிழர்கள் கிடைக்கவில்லை என்பது நம்பும் படியாக இல்லை” என்றும், மத்திய அரசுக்கு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

“கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம், மதுரையில் நடந்த அஞ்சல் பணியிடங்களுக்கான தேர்வில், தமிழ் பேசத் தெரியாத அரியானா மாநிலத்து இந்திக்காரர்கள் தமிழ் மொழிப் பாடத்தில் 25 க்கு 25 மதிப்பெண் பெற்றுத் தேர்வானார்கள் அல்லவா? அதுபோன்ற மோசடிகள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. இப்போது, பொன்மலையில்!” என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். 

“கடந்த 2019 ஏப்ரல் மாதம், தமிழ் நாட்டிலுள்ள ரயில்வே பணியிடங்களில் பணியாற்றப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 1,765 பழகுநர்களில் (Act Apprentice) சற்றொப்ப 1,600 பேர் வட மாநிலத்தவர் என்றும், அவர்களில் 300 பேர் இதே பொன்மலை ரயில்வேயில் பணியமர்த்தப்பட்டனர் என்றும், அதில் ஒரு தமிழர் கூட இல்லை” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார். “அந்த அநீதியை எதிர்த்து, 2019 மே 3 ஆம் தேதி அன்று, பொன்மலை பணிமனையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதாகவும்” அவர் குறிப்பிட்டுள்ளார்.  

“#தமிழகவேலைதமிழருக்கே என்ற முழக்கத்தோடு அன்றைக்கு நாம் முன்னெடுத்த சமூக வலைத்தளப் பரப்புரை இயக்கத்தில் இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளையோர் பங்கேற்றனர் என்றும், அனைத்திந்திய அளவில் அன்றைக்கு அது பேசு பொருளானது என்றும், நம் போராட்டத்தைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் கர்நாடக வேலைகள் கன்னடர்களுக்கே என டிவிட்டரில் பதிவு செய்தார் என்றும், 2020 ஜீன் மாதம், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திராவின் வேலை வாய்ப்புகளில் 75 விழுக்காடு தெலுங்கர்களுக்கே என சட்டம் கொண்டு வந்தார்” அவர் கூறியுள்ளார்.

“போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த ரயில்வே துரை கடந்த 20.05.2020 அன்று வெளியிட்ட பழகுநர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பில், தென்னக ரயில்வே எல்லைக்குள் வரும் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலத்தவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று விதிகளைத் திருத்தியதையும்” அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.  

“ஆனால், இப்போது, மீண்டும் பொன்மலையில் இந்திக்காரர்கள் திணிக்கப்பட்டுள்ள சூழலில் கடந்த 7 ஆம் தேதி அன்று, மீண்டும் பொன்மலை பணிமனையை பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து முற்றுகையிட்டுப் போராடினோம் என்றும், ஆனால் நிர்வாகத் தரப்பில் எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை” என்றும், அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

“குஜராத், மஹாராஷ்டிர, ஆந்திரா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் உள்ளதைப் போல், தமிழ் நாட்டிலும் மண்ணின் மைந்தர்களுக்கே வேலை என தமிழ்நாடு அரசு தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும், தமிழ் நாட்டிலுள்ள இந்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 90 விழுக்காட்டுப் பணிகளும், தமிழ் நாட்டு அரசுப் பணியில் 100 விழுக்காடும் தமிழர்களுக்கே உறுதி செய்யப்பட வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார்.

“இக்கோரிக்கையை அனைவரும் முன்னெடுத்து வெற்றிபெற்றால் தான், தமிழ்நாடு தமிழரின் தாயகமாக நீடிக்கும்; இல்லையெனில், தமிழ்நாடு இன்னொரு 'இந்தி' மாநிலமாக நம் கண் முன்னேயே சீரழிக்கப்படும்” என்றும், அவர் கவலைத் தெரிவித்துள்ளார். 

இறுதியாக, “ஆயிரம் ஆயிரமாண்டுகளாகத் தொடர்ந்து வரும் நம் தமிழர் தாயகம், நம் கண்முன்னே நம்மை கைகளை விட்டுப் போவதை நாம் வேடிக்கை பார்க்கலாமா? முடியாது! போராடினால், நாம் வெல்வோம்!” என்றும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.அருணபாரதி உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.