மதுபானங்களை அநியாய விலைக்குக் கூடுதல் தொகைக்கு விற்பதைத் தடுப்பதற்காக டாஸ்மாக் நிர்வாகம் டெபிட், கிரெடிட் கார்டுகளில் மதுபானங்களை வாங்கும் முறையை அடுத்த வாரம் அறிமுகம் செய்யவுள்ளது.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் 5,330 மதுக்கடைகளை நடத்தி வருகிறது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக சிகப்பு மண்டலங்களில் டாஸ்மாக் கடைகள் இயங்கவில்லை. பாதிப்பு இல்லாத பகுதிகளில் கடைகள் இயங்கி வருகின்றன.

இங்கெல்லாம் முன்பு வசூலிக்கப்பட்டதை விடவும் கூடுதலாக தொகை வசூலிக்கப்பட்டு மதுபானங்கள் விற்கப்பட்டு வருகின்றன. இதனால் நிறைய புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

ஆகவே இதைத் தடுக்க மதுக்கடைகளில் பாயிண்ட் ஆஃப் சேல் கருவிகளை வைத்து டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

அதற்கான கருவிகள் நிறுவுவது, ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றுக்காக ஒப்பந்த நிறுவனத்தைத் தேர்வு செய்ய சமீபத்தில் டெண்டர் கோரப்பட்டது. இதில் 7 வங்கிகள் பங்கேற்றதையடுத்து குறைந்த ஒப்பந்தப் புள்ளியைக் குறிப்பிட்ட ஐசிஐசிஐ வங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அடுத்தவாரம் முதல் டாஸ்மாக் கடைகளில் பாயிண்ட் ஆஃப் சேல் கருவிகளை வைக்கும் பணி தொடங்கப்பட்டு இருமாதங்களில் இது நிறைவடையும் என்று தெரிகிறது

இதுகுறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்கள் இங்கே -

`தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) சார்பில் 5 ஆயிரத்து 330 மதுபான கடைகள் தமிழகத்தில் உள்ளன. அனைத்து மதுபான கடைகளிலும் மின்னணு விற்பனை எந்திரங்கள் நிறுவுவதற்காக வங்கிகளிடம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இந்த ஒப்பந்தப்புள்ளியில் 7 வங்கிகள் கலந்து கொண்டன.

அவற்றில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, மற்ற வங்கிகளை விட குறைவான ஒப்பந்தப்புள்ளி தொகை குறிப்பிட்டு மின்னணு விற்பனை எந்திரங்கள் நிறுவுவதற்கு தேர்வாகி உள்ளது. டாஸ்மாக் இயக்குனர் குழுமம், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியுடன் இதுதொடர்பான ஒப்பந்தம் செய்துகொள்ள டாஸ்மாக் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதன் அடிப்படையில் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மின்னணு விற்பனை எந்திரங்கள் வாயிலாக டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதற்குரிய தொகையை டெபிட் கார்டுகள், யு.பி.ஐ. (ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் இடைமுகம்), பீம் யு.பி.ஐ., யு.பி.ஐ. கியூ ஆர் கோட், கிரெடிட் கார்டு, இன்டர்நேஷனல் கார்டு ஆகியவற்றின் மூலம் செலுத்தலாம்.

மின்னணு விற்பனை எந்திரங்கள் நிறுவும் பணி சுமார் 2 மாதங்களில் நிறைவடையும். டாஸ்மாக் கடைகளில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் இந்த மின்னணு விற்பனை கருவியை பயன்படுத்துவதற்கான பயிற்சி அளிக்கப்படும்.

சென்னை ஐகோர்ட்டு கடந்த மே மாதம் அளித்த தீர்ப்பில் டாஸ்மாக் மதுபான கடைகளில் மின்னணு விற்பனை எந்திரங்கள் வழியாக விற்பனை தொகையை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யவேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்புக்கு இணங்க மின்னணு விற்பனை எந்திரங்கள் வாயிலாக அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபான விற்பனை தொகையை மின்மயமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'

என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந்தேதிக்கு மேல் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மின்னணு விற்பனை கருவிகள் பொருத்தப்பட்டு, செப்டம்பர் மாத இறுதியிலோ அல்லது அக்டோபர் மாத தொடக்கத்திலோ டிஜிட்டல் முறையில் விற்பனைத் தொகை வசூலிக்கும் நடைமுறை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.