ராமேஸ்வரம், கோட்டைப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஐந்து விசைப்படகுகளில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது, இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு இலங்கைக் கடற்படை, தமிழக மீனவர்களைக் கைது செய்வதும் அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடிக் கருவிகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றது. கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள போதும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதை பல அரசியல் கட்சியினர் கண்டித்து வருகிறார்கள். 


இதை கண்டித்து மதிமுக தலைவர் வைக்கோ வெளியிட்ட அறிக்கையில், ‘’ எல்லை தாண்டி வந்து இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்த 121 படகுகள் இலங்கை துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுக் கிடக்கின்றன. தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை முற்றிலும் தடை செய்யும் நோக்கத்துடன், இலங்கை அரசு இலங்கை கடற்தொழில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது. 
இதன்படி, எல்லை தாண்டி மீன்பிடிக்க வரும் மீனவர்கள் கைது செய்யப்பட்டு, ரூபாய் 60 லட்சம் முதல் 1.75 கோடி இலங்கை ரூபாய் மதிப்பில் அபராதம் விதிக்கவும், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் புதிய சட்டம் வழிவகை செய்கின்றது.


2017 மே 11-ல் இலங்கையில் நடந்த விசாக நாள் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி சென்றபோது, அந்நாட்டு அரசிடம் இலங்கைக் கடற் தொழில் சட்டம் குறித்து மீனவர்களின் கவலையை இலங்கை அரசிடம் பிரதமர் தெரிவிக்கவில்லை. இந்திய அரசு காட்டிவரும் அலட்சியத்தால். மீண்டும் மீண்டும் தமிழக மீனவர்கள் இந்திய எல்லையிலேயே கைது செய்யப்படுவதும் இலங்கைக் கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளாவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கின்றன.


இலங்கை அரசின் இந்நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசும், மத்திய அரசும் உடனடியாகச் செயல்பட்டு, தமிழக மீனவர்களை விடுவிக்கவும், படகுகளை மீட்கவும் முன்வர வேண்டும் என வலியுறுத்துகின்றேன்'' என்று கூறியிருக்கிறார். 


இதனையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் , ‘’ தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது மிகவும் ஏமாற்றமளிப்பதாக உள்ளது. கைது செய்யப்பட்டுள்ள 36 மீனவர்களைஹ்யும் அவர்களது மீன்பீடி கருவிகளை பாதுக்காப்பாக தாயகம் மீட்டு வர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன் “ என்றுள்ளார்.