“சாலை பாதுகாப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது” என்று, முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்து உள்ளார்.
    
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 

அதன்படி திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார். 

நாளைய தினம் குற்றாலத்தில் இருந்து கடையநல்லூர் செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள பள்ளிவாசல் முன்பாக பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். பின்னர், சங்கரன்கோவில் வைஷ்ணவி மகாலில் இளைஞர், இளம் பெண்கள் பாசறை ஐ.டி பிரிவு நிர்வாகிகளுடன், முதலமைச்சர் பழனிசாமி கலந்துரையாடுகிறார்.

முன்னதாக, சாலை பாதுகாப்பு திட்டங்கள் அர்ப்பணிப்பு விழா மற்றும் தமிழ்நாடு அரசின் சிறந்த சாலை பாதுகாப்பு நடைமுறைகள் விழிப்புணர்வு விழாவானது, முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் சென்னையில் நடைபெற்றது, இந்த விழாவில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். 

அப்போது, “கிழக்கு கடற்கரைச் சாலையில், அக்கரை முதல் மாமல்லபுரம் வரை 8 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள வேகக் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் நவீன போக்குவரத்து மேலாண்மை அமைப்பை” மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முதலமைச்சர் பழனிசாமி ஆகியோர் சேர்ந்து நாட்டிற்காக அர்ப்பணித்தனர்.

இவற்றுடன் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில், 4 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சாலை பாதுகாப்பு ரோந்து வாகனங்கள் மற்றும் சாதனங்களை, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முதலமைச்சர் பழனிசாமி ஆகியோர் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தனர்.

அதன் தொடர்ச்சியாக, சாலை பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு சிறந்த முறையில் செயல்பட்டதற்கான முதன்மை மாநிலமாக, 2 முறை விருது பெற்றுள்ளதற்கான 
குறும்படம் அங்கே திரையிடப்பட்டது.

அத்துடன், சாலை பாதுகாப்பில் சிறந்து விளங்கிய சேலம், திருவள்ளூர், தஞ்சை மாவட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதினை, முதலமைச்சர் 
பழனிசாமி வழங்கினர். விருதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பெற்றுக் கொண்டனர். இதில், சிறந்த மாநகரமாகத் திருநெல்வேலிக்கு விருது வழங்கி பெருமைப்படுத்தப்பட்டது. 

அப்போது, விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “சாலை பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கை காரணமாக, விபத்து எண்ணிக்கை முற்றிலுமாக குறைந்து உள்ளதாக” குறிப்பிட்டார். 

அத்துடன், “சாலை பாதுகாப்பில், இந்தியாவுக்கே தமிழ்நாடு முன் மாதிரி மாநிலமாகத் திகழ்வதாகவும்” முதலமைச்சர் புகழாரம் சூட்டினார். 

“விபத்து மற்றும் அவசரக்கால சேவையை வழங்குவதற்காக, தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதாகவும், சாலை என்பது பயணிப்பதற்காக மட்டும் தான் என்றும், பந்தயத்திற்கானது அல்ல” என்றும், முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். 

“இளைஞர்கள் அனைவரும், தங்கள் ஆற்றலை ஆக்கப்பூர்வமாகச் செயல்படுத்தி, குடும்பத்தையும் நாட்டையும் காக்க வேண்டும்” என்றும், முதலமைச்சர் 
பழனிசாமி கேட்டுக்கொண்டார்.