சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவின் விடுதலை நெருங்கி வருகிறது. அக்டோபரில் அபராதத் தொகை செலுத்தப்பட்டு, அதே மாதத்திலே சசிகலா விரைவில் விடுலையாகிவிடுவார் என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட, ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாக வாய்ப்பிருப்பதாக கர்நாடக சிறைத் துறை தெரிவித்திருந்தது.

இந்த வழக்கில் சசிகலா, அவரது உறவினர்கள் ஜெ. இளவரசி, வி.என். சுதாகரன் ஆகியோரும் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் வி.என். சுகாதரன் சார்பில் அவருக்கான அபராத்தொகை நீதிமன்றத்தில் ஏற்கெனவே செலுத்தப்பட்டு விட்டது. இந்த நிலையில், வி.கே. சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலை ஆகலாம் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் பெறப்பட்ட தகவல் மூலம் தெரிய வந்தது.

ஆனால், அவர் செப்டம்பர் மாத இறுதியிலேயே விடுதலையாகும் வாய்ப்புகளும் உள்ளன என்கிறார் அவரது வழக்கறிஞர். மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு கால சிறை தண்டனை வழங்கப்பட்டு கர்நாடகா மாநிலத்தில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார் வி.கே. சசிகலா.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இவருடைய உறவினர்களான ஜெ. இளவரசி, வி.என். சுதாகரன் ஆகியோரும் இதே சிறையில் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். 2016ஆம் ஆண்டின் இறுதியில் ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுக பொதுச் செயலாளராக வி.கே. சசிகலா தேர்வுசெய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் சசிகலாவுக்கான தண்டனையை உறுதி செய்ததால் அவர் சிறை செல்ல நேர்ந்தது. இதற்குப் பிறகு டி.டி.வி. தினகரன் தலைமையில் அதிமுக இயங்கி வந்தது.

சசிகலா சிறை செல்வதற்கு முன்பாக, எடப்பாடி கே. பழனிச்சாமியை முதலமைச்சராக தேர்வு செய்திருந்தார். ஆனால், சசிகலா சிறை சென்ற சில மாதங்களிலேயே சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் தரப்பினரை ஒதுக்கிவிட்டு எடப்பாடி கே. பழனிச்சாமி செயல்பட ஆரம்பித்தார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் நிலையில், வி.கே. சசிகலாவின் விடுதலை, கூடுதலான அரசியல் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது. அவர் சிறையிலிருந்து எப்போது விடுதலையாவார் என்பது அவ்வப்போது விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பெங்களூரைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெங்களூரப மத்திய சிறைத் துறையிடம் சசிகலாவின் விடுதலை தொடர்பாக கேள்விகளை அனுப்பி, அவற்றுக்கான பதில்களைப் பெற்றுள்ளார். அதன்படி, "வி.கே. சசிகலா விடுதலை செய்யப்படும் தினம் 2021ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதியாக இருக்கும். ஆனால், அதற்குள் நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையை அவர் செலுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் அவர் 2022 பிப்ரவரி 27ஆம் தேதி விடுவிக்கப்படுவார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அவர் சிறை விடுப்பு எடுத்தால், விடுதலை பெறும் தேதி மாறக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால் அதிமுக, அமமுகவில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்ற எதிர்பார்ப்பு தற்போதே வலுக்கத் துவங்கியுள்ளது. எனினும், ``சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள வாய்ப்பில்லை" என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
 
இதுபற்றி சென்னையில் இன்று (செப்டம்பர் 17) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம், கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “சசிகலா விடுதலை என்பது சட்டப்படி நடைபெறும். அவர் சிறையில் இருந்து வெளியே வந்தாலும், வராவிட்டாலும் அதனால் அதிமுகவில் எந்தத் தாக்கமும் ஏற்படப்போவதில்லை. அவரைப் பற்றி கேட்டு ஊடகங்கள்தான் சசிகலாவுக்கு பில்டப் கொடுக்கின்றன. ஏற்கனவே நாங்கள் எடுத்த நிலைப்பாடுதான் தொடரும்” என்று பதிலளித்தார் ஜெயக்குமார்.

மேலும், பட்ஜெட் கூட்டத் தொடரின்போது சட்டசபையை அதிக நாட்கள் நடத்தக்கூடாது என்ற திமுக, தற்போது அதிக நாட்கள் நடத்த வேண்டுமென்கிறது என விமர்சித்த அவர், “திமுக கூட்டணியிலிருந்து சில கட்சிகள் விலகி, அதிமுகவிற்கு வருவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன. அதிமுக கூட்டணியில் இருந்து யாரும் வெளியேற வாய்ப்பில்லை” எனவும் கூறினார்.