சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்திற்கு சென்னை மாநகராட்சி கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டு காலத்துக்கு 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சொத்து வரி செலுத்தும் படி, சென்னை மாநகராட்சி சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. 

இந்த நோட்டீஸை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், `கடைசியாக கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி சொத்துவரி செலுத்தியதாகவும், சொத்து வரிகளை வழக்கமாக செலுத்தப்பட்டுள்ளது' என்று கூறப்பட்டிருந்தது.

சென்னை மாநகராட்சி ஆணையா் கடந்த செப்டம்பா் 10-ஆம் தேதி திருமண மண்டபத்துக்கான அரையாண்டுக்கான சொத்து வரி ரசீதை அனுப்பினாா். அதில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பா் மாதம் வரையிலான 6 மாதங்களுக்கு சொத்து வரியாக ரூ.6.50 லட்சம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த மாா்ச் மாதம் 24-ஆம் தேதி முதலே ராகவேந்திரா திருமண மண்டபம் மூடிக்கிடக்கிறது. மேலும் மண்டபத்தை முன்பதிவு செய்தவா்கள் வழங்கிய முன்தொகையையும் திரும்ப கொடுத்துவிட்டோம். இந்த நிலையில் திருமண மண்டபத்துக்கு மாநகராட்சி ஆணையா் சொத்து வரியை விதித்துள்ளாா். மாநகராட்சி சட்ட விதிகளின்படி 30 நாள்கள் கட்டடம் மூடப்பட்டு இருந்தாலே, சொத்து வரியில் 50 சதவீத சலுகை பெற உரிமை உள்ளது.

இந்த சலுகை கோரி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடந்த செப்டம்பா் 23-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பினேன். அந்த நோட்டீஸ் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. இந்த நிலையில் அக்டோபா் 15-ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தாத உரிமையாளா்களுக்கு வரி தொகையில் இரண்டு சதவீதம் அபராதமாக விதிக்கப்படும். அந்த தொகைக்கு வட்டியும் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. எனவே கடந்த செப்டம்பா் 23-ஆம் தேதி நான் அனுப்பிய நோட்டீஸை பரிசீலித்து முடிவு எடுக்கும் வரை சொத்து வரிக்கு அபராதம் வசூலிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் எனது கோரிக்கையை மாநகராட்சி சட்ட விதிகளின்படி பரிசீலிக்க மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி அனிதாசுமந்த் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ரஜினிகாந்த் தரப்பில் ஆஜரான வழக்குரைஞருக்கு கண்டனம் தெரிவித்து நீதிபதி கூறியது: மாநகராட்சி ஆணையருக்கு கடந்த செப்டம்பா் 23-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பி விட்டு உடனே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளீா்கள். கோரிக்கையைப் பரிசீலிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு கால அவகாசம் வழங்க வேண்டாமா? ஒருவேளை நோட்டீஸை பரிசீலிக்காவிட்டால், அதிகாரிகளுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பியிருக்கலாம். அதனை செய்யாமல் அவசரமாக உயா்நீதிமன்றத்தை நாடியிருப்பதை ஏற்க முடியாது.

நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக அபராதத்துடன் (வழக்குச்செலவு) வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என எச்சரித்தாா். ரஜினிகாந்த் தரப்பு வழக்குரைஞா் வழக்கைத் திரும்ப பெற கோரிக்கை விடுத்தாா். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இதுதொடா்பாக பதிவுத்துறையில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டாா். பதிவுத்துறையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, வழக்கைத் திரும்பப்பெற அனுமதியளித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். மேலும் வரிவிதிப்பு தொடா்பாக மனுதாரா் மாநகராட்சி நிா்வாகத்தை மீண்டும் அணுகவும், எந்தப் பதிலும் கிடைக்காத பட்சத்தில் உயா்நீதிமன்றத்தில் மனுதாரா் வழக்கு தொடரலாம் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.
 
இதனையடுத்து மனுவை திரும்ப பெறுவதாக ரஜினி தரப்பு வழக்கறிஞர் கூறினார். வழக்கை திரும்ப பெறுவது தொடர்பாக மனு அளிக்கும்படி நீதிபதியும் உத்தரவிட்டார். மேலும் நாளைக்குள் சொத்து வரியை செலுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, சொத்து வரி மற்றும் அபராதத் தொகையுடன் சேர்த்து ரூ.6.56 லட்சத்தை ரஜினிகாந்த் செலுத்தியுள்ளார். இதனை சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட தகவலில், 2020-21ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி சுமார் ரூ.6 லட்சம் மற்றும் தாமதமாக செலுத்துவதற்கான அபராதத் தொகை ரூ.9,386-யும் சேர்த்து காசோலையாக நடிகர் ரஜினிகாந்த் செலுத்தினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.