நண்பனைக் கொன்ற நண்பர்கள் 4 பேருக்கு ஆயுள்  தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டை செங்கலூரைச் சேர்ந்த கார்த்திகேயன், தனது நண்பர்களான சின்னத்துரை, பெரியராசு, மூர்த்தி, கந்தவேல் ஆகிய 4 பேருடன் அங்குள்ள மதுக்கடையில் மது அருந்திக்கொண்டிருந்தார்.

 Pudukkottai murder case judgement

அப்போது, நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் கடுமையாகத் திட்டி உள்ளனர்.

இந்த வாய் தகராறு முற்றிய நிலையில், கார்த்திகேயனை மற்ற 4 நண்பர்களும் சேர்ந்து கடுமையாகத் தாக்கி உள்ளனர்.

இதில், உயிர் பயத்தில் அவர் தப்பி ஓடியுள்ளார். ஆனால், அவரை விடாமல் விரட்டிச் சென்ற 4 பேரும், அப்பகுதியில் சற்று தொலைவில் உள்ள குருந்தனூரணி நொண்டி முனியன் கோயில் அருகே, அரிவாளால் கண்மூடித்தனமாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

இது தொடர்பாக செங்கலூரைச் சேர்ந்த அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில், அப்பகுதி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

 Pudukkottai murder case judgement

இதனையடுத்து, கொலை செய்த 4 குற்றவாளிகளையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற இக்கொலை சம்பவம் தொடர்பாக, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணைகளும் நடைபெற்று முடிந்த நிலையில், குறிப்பிட்ட இந்த 4 பேரும் தான் கொலை செய்திருக்கிறார்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, குற்றவாளிகள் 4 பேருக்கும், ஆயுள் தண்டனையும், தலா ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.