சென்னை பெருநகர காவல்துறையின் புதிய ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்றுள்ளார். அவரைப் பற்றிய தகவல்களை தற்போது பார்க்கலாம்..

தமிழகத்தில் 39 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து, தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இதில், தமிழகத்தின் பல்வேறு முக்கிய உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். 

அதன்படி, சென்னை பெருநகர காவல் ஆணையராக 3 ஆண்டுகள் பொறுப்பு வகித்த ஏ.கே.விஸ்வநாதன் மாற்றப்பட்டு, புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டார். சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் விடுமுறையில் சென்ற காலகட்டத்தின் போது, அந்தப் பொறுப்பில் தற்காலிகமாக மகேஷ்குமார் அகர்வால் அமர்த்தப்பட்டார். தற்போது, மீண்டும் அவரே சென்னை பெருநகர காவல்துறையின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டார். 

அதே நேரத்தில், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆப்ரேசன் பிரிவு ஏ.டி.ஜி.பி ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில், சென்னை பெருநகர காவல் துறையின் புதிய ஆணையராக மகேஷ்குமார் அகர்வால், இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை, சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, காவல் ஆணையராக இருந்த, ஏ.கே.விஸ்வநாதன் அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். பின்னர், அனைவருக்கும் நன்றி தெரிவித்து விடைபெற்ற ஏ. கே.விஸ்வநாதனுக்கு காவல் துறையினர் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். 

இதனைத் தொடர்ந்து, புதிதாகப் பொறுப்பேற்ற காவல் ஆணையர் மகேஷ்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, “கொரோனா ஊரடங்கு காரணமாக, வாரத்தில் இரு முறை பொது மக்களுடன் காணொலி காட்சி மூலம் புகாரைப் பெற்று விசாரிக்கப் போவதாக” தெரிவித்தார். 

தற்போது, சென்னை மாநகர காவல் ஆணையராகவும், கொரோனா தடுப்பு வடக்கு மண்டல பொறுப்பாளர் பதவியும் மகேஷ்குமார் அகர்வாலிடமே தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், சென்னை பெருநகர காவல் துறையின் புதிய ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், கடந்த காலங்களில் பல முக்கிய வழக்குகளைக் கையாண்டு இருக்கிறார்.

பஞ்சாப் மாநிலம் பத்திண்டாவில் கடந்த1972 ஆம் ஆண்டு பிறந்த மகேஷ் குமார் அகர்வாலுக்கு, தற்போது 48 வயது நடைபெறுகிறது. இவர், நேரடி ஐ.பி.எஸ். அதிகாரியாக கடந்த 1994 ஆம் ஆண்டு காவல் துறை பணிக்கு வந்துள்ளார்.

மகேஷ்குமார் அகர்வாலின் காவல் துறை பணியானது, தமிழகத்தின் தேனி மாவட்ட எஸ்.பி.யாக முதன் முதலாகத் தொடங்கி இருக்கிறது. பின்னர், சண்டிகரில் சி.பி.ஐ.யில் 7 ஆண்டுகள் வரை பணி புரிந்திருக்கிறார். அதன் பிறகு, மீண்டும் தமிழ்நாடு காவல் துறைக்குத் திரும்பி சி.பி.சி.ஐ.டி. டிஐஜியாக பொறுப்பேற்றார்.

குறிப்பாக, மகேஷ்குமார் அகர்வாலுக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளில் நன்கு அறிந்திருக்கிறார்.

மேலும், சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர், மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகிய பதவிகளையும் மகேஷ்குமார் அகர்வால் வகித்திருக்கிறார். 

தமிழகத்தில், டிஐஜியாக பணியாற்றிய அதே சி.பி.சி.ஐ.டி.யில், அதன் பின்னர் ஐஜியாக பதவி உயர்வு பெற்றார் மகேஷ்குமார் அகர்வால்.

சென்னை போக்குவரத்து துணை ஆணையர், சென்னை பூக்கடை துணை ஆணையராகவும், மகேஷ்குமார் அகர்வால் கடந்த காலங்களில் பதவி வகித்திருக்கிறார். 

கடந்த 2016 ஆம் ஆண்டு சேலத்திலிருந்து - சென்னைக்கு ரயிலில் கொண்டு வரப்பட்ட 5.78 கோடி ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட போது, அந்த சவாலான வழக்கு, அன்றைய சி.பி.சி.ஐ.டி. ஐஜியாக இருந்த இந்த மகேஷ் குமார் அகர்வால் தலைமையிலான காவல் துறை குழுவினர் வசம் தான் ஒப்படைக்கப்பட்டுக் கண்டுபிடிக்கப்பட்டது.

அத்துடன், தமிழகத்தில் நடைபெற்ற இந்து மதத் தலைவர்கள் கொலை வழக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பு வழக்கு, சென்னை சிறுசேரி பெண் இன்ஜினீயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு என பல்வேறு முக்கிய வழக்குகளில் மர்மத்தை விலக்கியவர் தான் இந்த மகேஷ் குமார் அகர்வால்.

தற்போது, கொரோனா தாக்கம் காரணமாகத் தமிழ்நாடு முடங்கி உள்ள சூழலிலும், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் தந்தை - மகன் லாக்கப் டெத் விவகாரம் மிகப் பெரிய சர்ச்சையான சூழ்நிலையிலும் சென்னை பெருநகர காவல் ஆணையராக மகேஷ் குமார் அகர்வால் பொறுப்பேற்றுள்ளார்.

இதனிடையே, சென்னை பெருநகர காவல் ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள மகேஷ் குமார் அகர்வாலுக்கு, துணை பேராசிரியையாக பணியாற்றும் மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.