கு.க.செல்வம், சென்னையின் இதயப் பகுதியான ஆயிரம்விளக்கு தொகுதியில் இருந்து எம்எல்ஏ ஆனவர். அதிமுகவில் இருந்த கு.க.செல்வம் 1997-ல் திமுகவில் இணைந்தார். பிறகு ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த அவர், திமுக தலைமை நிலையச் செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ப.வளர்மதியை தோற்கடித்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன், இவர் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுடன் டெல்லிக்கு சென்று, நேற்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கு.க.செல்வம் பேசிய போது, திமுக தலைமை மீது மிகக்கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, கு.க.செல்வத்தை திமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுவிப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார். இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில், “திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம், அவர் வகித்து வந்த பொறுப்புகளிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார். அவரை தற்காலிகமாக கழகத்தில் இருந்து நீக்கி வைப்பதுடன், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஏன் நீக்கக்கூடாது என அவருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டிருந்தது. 

திமுக கட்டுப்பாட்டை மீறியும், திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், செயல்பட்டு வருவதையொட்டி, அவரைத் தற்காலிகமாக திமுகவிலிருந்து நீக்கி வைப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைமையிடமான கமலாலயத்தில் உள்ள பாஜக மூத்த நிர்வாகிகளை சந்தித்தார் கு. க. செல்வம். பின் செய்தியாளர்களையும் சந்தித்த அவர், அப்போது கூறுகையில் ``திமுக வில் இருந்து என்னை முழுவதுமாகக்கூட நீக்கிக் கொள்ளட்டும். என்ன நடவடிக்கை எடுத்தாலும், அதை நான் சந்திக்க தயார். இப்போது திமுக.வில் உதயநிதி சொல்வதை கேட்கும் நிலை திமுகவில் உள்ளது. 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் திமுகவில் இருக்காதீர்கள். எனக்கு ஏற்பட்ட நிலை நாளை உங்களுக்கும் ஏற்படலாம். அதனால் எல்லோரும் பாஜகவில் வந்து சேருங்கள். திமுக.வில் வாரிசு அரசியல் போய் குடும்ப அரசியல் வந்து விட்டது. திமுக.வில் உள்ளவர்கள் பாஜக.விற்கு வர வேண்டும்

பொது மக்களுக்கு உழைப்பதற்காகவே எம்.எல்.ஏ. ஆனேன். நான் 50 ஆண்டுகள் திராவிட கட்சியில் இருந்துள்ளேன். எம்.ஜி.ஆரிடம் 25 ஆண்டுகள் இருந்துள்ளேன். 25 ஆண்டுகள் கருணாநிதி, ஸ்டாலினிடம் இருந்துள்ளேன். கடவுள் முருகனை விமர்சித்தவர்களை ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும். அதை அவர் செய்யவில்லை. தி.மு.க.வில் உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும். தி.மு.க.வில் தந்தை அடுத்து பிள்ளை தற்போது பேரன் என வாரிசு அரசியல் போய் குடும்ப அரசியல் வந்துள்ளது.தி.மு.க. வில் இருப்போருக்கு எனக்கு ஏற்பட்ட நிலை தான் ஏற்படும்" என்று கூறியிருந்தார்.

கு.க.செல்வத்தை தொடர்ந்து, தமிழக பா.ஜ. துணை தலைவர் வி.பி.துரைசாமி பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, ``எம்.எல்.ஏ. செல்வம் சிறப்பாக செயல்படும் மத்திய அரசை பாராட்டுகிறார். தமிழகத்தில் குடும்பத்திற்காக கட்சி நடத்துவதை பாஜக எதிர்க்கும். தி.மு.க.வில் உள்ள அதிருப்தியாளர்கள் காலம் தாழ்த்தாமல் பிரதமர் மோடி கரத்தை வலுப்படுத்த பாஜக அலுவலகம் வர வேண்டும்" என்று கூறினார்.

இவரை தொடர்ந்து எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனும் பாஜகவில் இணையலாம் என்ற செய்தி சமூக ஊடகங்களில் வெளியானது. ஆனால், ''திராவிட முன்னேற்றக் கழகத்தின் விசுவாசமிக்க தொண்டனாக கழகத் தலைவர் தளபதி தமிழகத்தின் முதலமைச்சராவதற்கு இதய சுத்தியோடு தீவிரமாக பணியாற்றி வருவதை கழகத் தலைவர் நன்கறிவார். ஆகையால் என்னை கழகத்திலிருந்து தலைவரிடமிருந்தும் எவராலும் பிரிக்க முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று எம்.எல்.ஏ. அனிதா ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்