கோயம்புத்தூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை பகுதியில் புத்தம் புதிய பொலிவுடன் திறக்கப்பட்ட பாஜக MLA வானதி சீனிவாசன் அலுவலகத்தில் “தனலாபம்” என்று எழுதப்பட்டுள்ளது, பொது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. “இது என்ன மளிகை கடையா? லாப நோக்க அலுவலகமா?” என்று, பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அலுவலகம், புதிய வண்ணம் தீட்டப்பட்டு பூஜைகள் செய்து இன்று திறக்கப்பட்டது.

தன்னுடைய இந்த MLA  அலுவலக கட்டிடத்தை, பாஜக பிரமுகர்கள் புடைசூழ அந்த தொகுதியின் MLAவான வானதி சீனிவாசனே திறந்து வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக, அந்த அலுவலகத்தில் பூஜைகள் செய்யப்பட்டு, குத்து விளக்கேற்றப்பட்டது. 

பின்னர், தனது தாய் தந்தை மற்றும் அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற MLA வானதி சீனிவாசன், சட்டப்பேரவை உறுப்பினர் இருக்கையில் அமர்ந்தார். 

அதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களிடம் பேசிய  MLA வானதி சீனிவாசன், “கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகப் பயிற்சி அளிக்கப்படும் என்றும், பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்” என்று, குறிப்பிட்டார்.

“அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என விஷ்வ ஹிந்து பரிஷத் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறது என்றும், தமிழில் அர்ச்சனை தற்போது நடைபெற்று வருகிறது என்றும், மேல்மருவத்தூர் மற்றும் சமுதாய கோயில்களில் பெண்கள் பூஜை செய்து வருகின்றனர் என்றும். இதில் தமிழ்நாடு அரசு புதிதாக எதையும் செய்யவில்லை” என்றும், அவர் கூறினார். 

“கோயில்களில் ஆகம விதிப்படி தான், பூஜை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற அறிவுறுத்தி உள்ளது என்றும், இதில் பக்தர்களின் உணர்வு, கோயில் நிர்வாகத்தின் ஆலோசனையைக் கேட்டு, அவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தி நடக்க வேண்டும்” என்றும், அவர் அறிவுறுத்தினார்

மேலும், “திமுக இந்துக்களுக்கும், இந்து கடவுள்களுக்கும் எதிரானவர்கள் என நான் சொல்லவில்லை என்றும், அதன் தலைவர்களே சொல்லி இருக்கின்றனர்” என்றும், குறிப்பிட்டுப் பேசினார். 

“இந்து சமய அற நிலையத்துறையில் தற்போது எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தன்னிச்சையானதா, உண்மையானதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும். தமிழ்நாடு அரசு உண்மையாகவே இந்து கோயில்களின் மீது அக்கறை இருந்தால், கோயில் சொத்துக்கள், நிலங்களை இந்துக்கள் அல்லாதவர்களிடமிருந்து மீட்க வேண்டும்” என்றும். வலியுறுத்தினார். 

“கோயில் சொத்துக்களை பாதுகாக்க ஆதீனங்களின் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்“ என்றும், அவர் அறிவுறுத்தினார். 

MLA வானதி சீனிவாசனின் இந்த பேட்டி, அவரது அலுவலக கட்டிட புகைப்படத்துடன் செய்தி வெளியானது. அதன் படி வெளியான அந்த புகைப்படத்தில், கோயம்புத்தூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் காவி நிறமாக மாறியதற்கும், அங்கு நடைபெற்ற பூஜையின் சுவரில் “தனலாபம்” என்று எழுதி இருப்பதும் பொது மக்களுக்குத் தெரிய வந்தது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த பொது மக்கள், சமூக வலைத்தளங்களில் MLA வானதி சீனிவாசனை, எதிர்மறையான கேள்விகளால் தொடர்ந்து கேள்வி கேட்டு வருகின்றனர்.

அத்துடன், MLA வானதி சீனிவாசனின் அலுவலக சுவரில் “தனலாபம்” என்று எழுதி இருப்பதைப் பகிர்ந்து, “இது என்ன மளிகை கடையா? லாப நோக்க அலுவலகமா?” என்று, நெட்டிசன்கள் பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர். இதனால், இந்த செய்தி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.