தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் வர இருக்கும் நிலையில், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாகக் கூட்டணிக் கட்சிகள் பற்றிய விவாதங்கள், வலுப்பெற்று வருகின்றது. 

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக 2 முறை தொடர்ந்து ஆட்சியில் உள்ள அதிமுக, 3-வதுமுறையும் ஆட்சியை தக்கவைக்கமுயற்சி செய்து வருகிறது. அடுத்தஆண்டு நடக்கவுள்ள தேர்தல்களத்தை வலுவான கூட்டணியுடன் சந்திக்க திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர், வழிகாட்டுதல் குழு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான சிக்கல் உருவாகியுள்ள நிலையில், கட்சியின் செயற்குழு நாளைகூடுகிறது. ஆனால், முதல்வர் வேட்பாளர், ஓபிஎஸ் தரப்பினர் வலியுறுத்தும் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு மற்றும் சசிகலா விடுதலை உள்ளிட்ட விவகாரங்கள் கட்சிக்குள் சிக்கல்களை உருவாக்கியுள்ளன.

அண்மையில் நடந்த அதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில்,இந்த விவகாரங்கள் குறித்து நிர்வாகிகள் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்துஅன்றிரவே முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி, செப்.28-ம் தேதி செயற்குழு கூட்டத்தை நடத்துவது என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அதிமுக செயற்குழு கூட்டம் கட்சித் தலைமைஅலுவலகத்தில் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நாளை (செப்.28) நடக்கிறது. கூட்டத்துக்கு முன்னதாகசிக்கல்களுக்கு தீர்வு காணவேண்டும். அந்த சிக்கல்களுக்கான தீர்வை செயற்குழு கூட்டத்தில் அறிவித்து அதற்கான ஒப்புதலை பெற வேண்டும் என்பதே ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினரின் முடிவாக உள்ளது.

ஆனால், முதல்வர் வேட்பாளரை இப்போதே அறிவிக்க வேண்டும் என்பதில் முதல்வர் பழனிசாமி தரப்பும், தேர்தல் முடிந்த பின்னர் பார்க்கலாம் என்பதில் ஓபிஎஸ் தரப்பும் முடிவாக உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, ஓபிஎஸ் தரப்பினர் முன்வைத்துள்ள வழிகாட்டுதல் குழு அமைக்க வேண்டும் என்ற கருத்தை முதல்வர் தரப்பு ஏற்கவில்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு துணை முதல்வர் ஓபிஎஸ், அவைத் தலைவர் இ.மதுசூதனனை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். ஓய்வில் இருக்கும் அவரை ஓபிஎஸ் சந்தித்துள்ளது அதிமுகவில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், இவர்களில் ஒரு தரப்பு விட்டுக் கொடுத்து பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்பதே, அதிமுக நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது. அதேநேரம், விட்டுக் கொடுத்தால் கட்சியில் தங்களுக்கான முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று இருதரப் பும் கருதுகின்றன.

நாளை நடக்கும் செயற்குழு கூட்டத்தில் சிக்கல்களுக்கான தீர்வு ஏற்படுமா என்ற கேள்வியே அதிமுக தொண்டர்களிடம் எழுந்துள்ளது. 

இந்நிலையில் ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவேற்காடு பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமை அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் அந்த பகுதிகளில் உள்ள கால்வாய் மற்றும் அரசு நிலங்கள் சம்பந்தமான பகுதிகளையும் அவர் பார்வையிட்டார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது:-

 ``பீகார் மாநிலத்தில் எப்போது தேர்தல் நடக்க வேண்டுமோ, அந்த நாளில்தான் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் அடுத்த ஆண்டு மே 23-ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடக்கும் என நம்புகிறேன்.

நம்மைவிட கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலத்தில் தேர்தல் நடத்துகிறார்கள். இன்னும் 8 மாதத்துக்குள் கொரோனா இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும். பிரதமர் மோடியே, நமது முதலமைச்சரை பாராட்டி உள்ளார்.

தமிழகத்தில் தேர்தலை தள்ளிவைப்பதற்கான எந்த சாத்தியக்கூறுகளும் இல்லை என நான் நினைக்கிறேன். அடுத்த ஆண்டு மே மாதம் கண்டிப்பாக தேர்தல் நடக்கும். 3-வது முறையாக அ.தி.மு.க. ஆட்சி மலர்ந்தது என்ற செய்தி வரும்.

மறைந்த திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கான பாடலை பலரும் பாடத் தயங்கிய காலத்தில் அவருக்காக பாடியவர். இப்போதும் அ.தி.மு.க.வில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அந்தப் பாடல் முதலில் ஒலிக்கும். 4 தலைமுறைகளுக்கான பாடல்களை பாடி உள்ளார். அவரது உடல் தாமரைப்பாக்கத்தில் விதைக்கப்பட்டு இருப்பது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எங்களுக்கு பெருமை தரக்கூடிய விஷயமாகக் கருதுகிறோம் என தெரிவித்தார்.